Noah Lyles- யார் இந்த நோவா லைல்ஸ்? ஆஸ்துமா நோயாளி முதல் ஒலிம்பிக் சாம்பியன் வரை
பாரிஸ் : ஒலிம்பிக் பந்தயத்தில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு போட்டி என்றால் அது ஆடவர் 100 மீட்டர் பிரிவுதான். ஒட்டுமொத்த விளையாட்டு ரசிகர்களும் எவ்வளவு நேரமானாலும் கண்விழித்து பார்க்கக்கூடிய ஒரு போட்டியாக இது கருதப்படுகிறது. ஆடவர் 100 மீட்டர் பந்தயத்தில் யார் தங்கம் வெல்கிறார்களோ? அவர்கள் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஒரு செலிபிரிட்டியாக வலம் வருவார்கள்.
அப்படி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் யார் வாங்க போகிறார் என்று எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்களிடம் ஏற்பட்டது. இத்தாலியைச் சேர்ந்த மார்சல் நடப்புச் சாம்பியன் ஆக மீண்டும் களமிறங்கினார். இதேபோன்று ஜமைக்கா வீரர்கள் தாம்சன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த நடப்பு 100 மீட்டர் உலக சாம்பியன் நோவா லைல்ஸ் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் நோவா லைல்ஸ் 9.784 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த நிலையில் நோவா லைல்ஸ் யார்? அவர் எப்படி பல தடைகளைக் கடந்து சாம்பியன் ஆனார் என்பதை தற்போது பார்க்கலாம். 27 வயதான நோவா லைல்ஸ் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் பிறந்தார். இவர் ஏற்கனவே டோக்கியோ 200 மீட்டர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர் ஆவார்.
உசைன் போல்ட் பிறகு தடகள போட்டிகள் சூப்பர் ஸ்டாராக விளங்கி வரும் நோவா லைல்ஸ், ஆறு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்.நோவா லைல்ஸின் தாயார் தடகள வீராங்கனையாக கல்லூரி காலத்தில் இருந்திருக்கிறார். இதனால் பெற்றோரிடம் இருந்து வந்த டிஎன்ஏ காரணமாக நோவா லைல்ஸ் சிறுவயதிலிருந்து விளையாட்டுப் போட்டிகளில் சுறுசுறுப்பாக விளங்கி இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் தான் நோவா லைல்ஸ்க்கு திடீரென்று சிறுவயதில் ஆஸ்துமா நோய் தாக்கியிருக்கிறது. இதனால் நடக்கவே கஷ்டப்பட்ட நோவா லைல்ஸ் அடிக்கடி மருத்துவமனையில் ஒரு மாதம் வரை தங்கி சிகிச்சை பெறுவாராம். அப்போது அவருடைய தாயார், இது எல்லாம் சில காலத்திற்கு தான். உன்னால் நிச்சயமாக இந்த நிலையிலிருந்து மீண்டு வர முடியும்!
ஆஸ்துமா உன் வாழ்க்கையை தடை போட்டு விடக்கூடாது என்று கூறி அவருக்கு சிறுவயதிலே ஊக்கத்தை கொடுத்திருக்கிறார். இதனை அடுத்து தன் வாழ்க்கையை மருத்துவமனையில் கழித்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த நோவா லைல்ஸ், தனது உணவு பழக்க வழக்கம் மற்றும் உடலை கட்டுக்கோப்பாக மாற்ற தீவிர பயிற்சி செய்தார்.
அதன் பிறகு தனது தாயார் போலவே தடகள விளையாட்டில் ஆர்வம் காட்டிருக்கிறார். பள்ளியில் உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் என பல போட்டிகளில் பங்கேற்ற நோவா லைல்ஸ், கடந்த 2016 ஆம் ஆண்டு 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார். ஆஸ்மா பாதிக்கப்பட்டு இருப்பதால் எடுத்த உடனே நோவா லைல்ஸ் ஆல் அதிவேகமாக ஓட முடியாது என்பதால் அவர் 200 மீட்டர் போட்டிகளில் கவனம் செலுத்தி வந்துள்ளார்.
அதன் பிறகு தான் உசேன் போல்ட் போல நாமும் 100 மீட்டர், 200 மீட்டர் என இரு பந்தயங்களிலும் வெற்றி பெற வேண்டும் என முடிவெடுத்த நோவா லைல்ஸ், அதன் பிறகு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் கவனம் செலுத்தி தற்போது ஒலிம்பிக்கில் தங்கமும் வென்று இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நோவா லைல்ஸ், எனக்கு ஆஸ்துமா, அலர்ஜி, பதற்றம் மன அழுத்தம் போன்ற பல பிரச்சனைகள் இருக்கிறது. எனினும் நான் வாழ்க்கையில் என்னவாக போகிறேன் என்பதை இந்த பிரச்சனைகள் எல்லாம் தடுக்காது. என்னால் முடிந்தால் உங்களால் ஏன் முடியாது என்று நோவா லைல்ஸ் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications