Vinesh Phogat: 2032 வரை மல்யுத்தம் செய்திருப்பேன்.. எதிர்கால திட்டம் என்ன? வினேஷ் போகத் கடிதம்!
மும்பை: ஒலிம்பிக் தொடரின் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததன் காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதன் காரணமாக இறுதிப்போட்டிக்கு விளையாட முன்னேறியிருந்த அவருக்கு பதக்கம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மேல்முறையீடு வரை சென்றும், வினேஷ் போகத்திற்கு பதக்கம் கிடைக்கவில்லை.
இதனிடையே மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்திருந்தார். கடந்த 10 நாட்களாக வினேஷ் போகத் சந்தித்து வந்த சவால்கள் குறித்து சோசியல் மீடியாவில் கடிதமாக வெளியிட்டுள்ளார். அதில், சிறிய கிராமத்தில் பிறந்த சிறுமியான எனக்கு ஒலிம்பிக் குறித்தோ, மல்யுத்த களம் குறித்தோ எதுவுமே தெரியாது. சிறுமியாக இருந்த போது நீண்ட முடி வேண்டும், கைகளில் மொபைல் உள்ளிட்டவையே கனவாக இருந்தது.

எனது தந்தை பேருந்து ஓட்டுநராக இருந்தவர். அவர் ரோட்டில் சென்றாலும், தனது மகள் விமானத்தில் பறக்க வேண்டும் என்று விரும்பினார். 3 குழந்தைகளில் இளையவள் என்பதால் என்னிடம் அதிக பாசத்தை காட்டுவார். அவரது கனவை என்னிடம் சொல்லும் போது பெரிதாக புரிந்து கொள்ளவில்லை. எனது தாய்க்கு அவரைவிட சிறந்த வாழ்க்கையை தனது மகள்கள் வாழ வேண்டும், சுதந்திரமாக, சொந்தக் காலில் நிற்கு வேண்டும் என்பதே அம்மாவின் ஆசையாக இருந்தது. ஒருநாள் எனது தந்தை எங்களை விட்டு மறைந்து சென்றுவிட்டார்.
அப்போது என்னிடம் அவரின் ஆசை மட்டுமே இருந்தது. அதேபோல் தந்தை மறைந்த 3 மாதங்களில் அம்மாவுக்கு ஸ்டேஜ் 3 புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அப்போது 3 குழந்தைகளின் வாழ்க்கையும் அம்மாவுக்கு உதவி செய்வதற்காக மாறியது. ஒரு கட்டத்தில் மொபைல், நீண்ட முடி போன்ற ஆசைகள் மாறி, வாழ்க்கையில் பிழைத்து கொள்ள வேண்டிய நிலை உருவாகியது. அம்மாவின் போராட்ட குணமும், பிடிவாதமுமே இன்று நான் இந்த நிலையை எட்டியவதற்கு முக்கியமான காரணம். தைரியம் என்று சொல்லும் போது அம்மாவின் நினைவு தான் வருகிறது.
ஒவ்வொரு முறையும் முடிவை பற்றி கவலைப்படாமல் மல்யுத்தம் செய்வதற்கு அம்மாவின் தைரியமே எனக்கு உதவியாக உள்ளது. எவ்வளவு பெரிய போராட்டம் வந்தாலும் ஒருநாளும் கடவுள் மீதான நம்பிக்கை குறையவில்லை. நிச்சயம் வாழ்வில் முன்னேற வழி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தோம். நல்லவர்களை ஆண்டவன் கைவிட மாட்டான் என்று அம்மா சொல்லிக் கொண்டே இருப்பார். எனது கணவரை கண்ட போது இந்த வார்த்தைகள் மீது இன்னும் பற்று வந்தது.
ஒரு நண்பராக, கணவராக எனது ஆசைகளுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். ஒவ்வொரு முறை பிரச்சனை வரும் போதும், ஒரு அரணாக நின்று என்னை பாதுகாத்தவர் கணவர் சோம்வீர். அவர் இல்லையென்றால் இந்த பயணமே சாத்தியப்பட்டிருக்காது. இந்த பயணத்தில் ஏராளமான நல்ல மனிதர்களையும், சில மோசமானவர்களையும் சந்தித்திருக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளில் களத்திலும், களத்திற்கு வெளியிலும் ஏராளமான விஷயங்கள் நடந்துவிட்டன. எனது வாழ்க்கையே மாறிவிட்டது. என் அருகில் இருந்தவர்களிடம் நேர்மை மட்டுமே இருந்தது.
அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை தான், இவ்வளவு தூரம் என்னை போராட வைத்துள்ளது. களத்தில் நான் சிறப்பாக செயல்படுவதற்கு என்னுடைய குழுவினர் முக்கியமான காரணம். மருத்துவர் தின்ஷா பர்திவாலா.. இந்திய விளையாட்டில் இது புதிய பெயர் அல்ல. எனக்கு மட்டுமல்லாமல் இந்திய விளையாட்டு வீரர்கள் பலருக்கும் காப்பாற்ற வந்த தேவதை அவர். காயங்களால் துவண்டுபோன எனக்கு, நம்பிக்கையூட்டியவர் அவர் தான். எனக்கு ஒரு முறை அல்ல.. 3 முறை அறுவை சிகிச்சை செய்தவர் பர்திவாலா தான்.
அவரின் பொறுப்பை நேர்மையுடன் செய்து வருபவர். கடவுள் கூட பர்திவாலாவை சந்தேகிக்க முடியாது. அவருக்கும், அவரது குழுவினருக்கும் எப்போதும் நன்றிக் கடன்பட்டுள்ளேன். ஒலிம்பிக் தொடரின் போது அவரும் எங்களுடன் இருந்தது கடவுள் கொடுத்த பரிசு என்றே சொல்ல வேண்டும். அதேபோல் மருத்துவ வெய்ன் பாட்ரிக் 2 முறை உதவி செய்திருக்கிறார். அவரை மூத்த அண்ணன் என்று தான் சொல்வேன். அதன்பின் பயிற்சியாளர் அகோஸ். மகளிர் மல்யுத்த விளையாட்டின் மிகச்சிறந்த பயிற்சியாளர் இவர் தான்.
அவரின் அகராதியில் முடியாது என்ற வார்த்தையே கிடையாது. களத்திலும், களத்திற்கு வெளியிலும் எந்த பிரச்சனையாக இருந்தாலும், கைகளிலேயே முடிவுடன் இருப்பார். நான் சோகமாக இருக்கும் போது, சரியான வார்த்தைகள் மூலம் புத்துணர்ச்சி கொடுப்பார். யாரின் வெற்றியையும் தன்னால் நிகழ்ந்தது என்று சொல்லாதவர். அதேபோல் அஸ்வினி ஜீவன் பாட்டில். கடந்த 2.5 ஆண்டுகளாக என்னுடன் அனைத்து நேரங்களிலும் உடனிருந்தவர். ஒரு பிசியோதெரபிஸ்டாக அத்தனை நேரங்களில் ஆதரவாக இருந்துள்ளார்.
உடல் எடையை குறைக்க காரணமாக இருந்த தஜிந்தர் சிங், ஓஜிக்யூ குழுவினர் அனைவருக்கும் நன்றிக் கடன்பட்டுள்ளேன். டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பின் 2021ஆம் ஆண்டு மற்றும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டமும் சவாலான காலகட்டமாக அமைந்தது. அவர்கள் இல்லாமல் என்னால் மீண்டு வந்திருக்க முடியாது. மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தில் இந்திய பெண்களின் சுயமரியாதையை காக்க கடுமையாக போராடினேன். 2023 மே 28ஆம் தேதி தேசிய கொடியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்க்கும் போது மனதை சோர்வடைய செய்யும்.
அதே தேசியக் கொடியை ஒலிம்பிக் அரங்கில் உயர பறக்க வைக்க வேண்டும் என்று போராடினேன். இந்த விஷயங்கள் குறித்து இன்னும் சில நேரம் கிடைக்கும் போது பேசலாம். ஆனால் ஆகஸ்ட் 6ஆம் தேதி இரவு முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை வரை எங்களிடம் இருந்த முழு சக்தியையும் கொடுத்து போராடினோம். கடைசி வரை தோற்க பிடிவாதம் பிடித்தோம். ஆனால் காலம் எங்களிடம் கருணையை காட்டவில்லை. எல்லாம் என் விதி என்று சொல்ல வேண்டும்.
சாதிக்க வேண்டும் என்று விரும்பியது கனவாகவே கலைந்தது. 2032ஆம் ஆண்டு வரை விளையாடுவேன் என்று நினைத்திருந்தேன். ஏனென்றால் எனக்குள் மல்யுத்தமும், போராட்ட குணமும் எப்போதும் இருக்கும். எனது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் எதை நம்புகிறேனோ, சரியான விஷயமென்றால் நிச்சயம் போராடுவேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications