Vinesh Phogat : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், வெள்ளி கூட வாங்கவில்லை. இதனால் யாராவது ஒரு வீராங்கனை தங்கம் வெள்ளி வாங்கி விட மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் தான் வெயிட் பண்ணுங்க நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார் வினேஷ் போகட்.
மல்யுத்த களத்தில் நட்சத்திர வீராங்கனையாக வினேஷ் போகட்
விளங்குகிறார். வினேஷ் போகட் என்ற பெயரை கடந்த ஆண்டு முழுவதும் நாம் செய்திகளில் கேட்டு அறிந்திருப்போம். ஆனால் அது அனைத்தும் விளையாட்டுக் களத்திற்கு வெளியே நடந்த விஷயமாகும்.

மல்யுத்த சம்மேளனத்தில் தலைவராக இருந்த அப்போதைய பாஜக எம்பி பிரிஜேஷ் பூஷன் வீராங்கனைகளிடம் தவறாக நடந்து கொண்டதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வினேஷ் போகட் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது வினேஷ் போகட் மீது பல்வேறு புகார்களையும் தூற்றல்களையும் பிரிஜேஷ் பூஷனின் ஆதரவாளர்கள் வைத்தனர்.
கடைசிவரை தெருவில் போராடியும் வினேஷ் போகட் போராட்டத்தில் நியாயம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வெற்றியால் மட்டுமே இவர்களுக்கு பதிலடி கொடுக்க முடியும் என நினைத்த வினேஷ் போகட் கடும் பயிற்சி செய்து ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்றார். இந்த நிலையில் மகளிர் 50 கிலோ ப்ரீ ஸ்டைல் மல்யுத்த போட்டியில் நான்கு முறை ஒலிம்பிக் சாம்பியன் ஆன ஜப்பான் வீராங்கனை சுசாகியை வினேஷ் போகட் எதிர்கொண்டார். சர்வதேச அளவில் சுசாகி இதுவரை தனது ஒட்டுமொத்த மல்யுத்த வாழ்க்கையிலும் ஒரு போட்டிகளில் கூட தோற்றது கிடையாது.
அப்படிப்பட்ட வீராங்கனையை தான் வினேஷ் போகட் மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் வீழ்த்தி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறார். ஆசிய போட்டி மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை, உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை போன்ற பல சாதனைகளை படைத்திருந்தாலும் அவர் இதுவரை ஒலிம்பிக்கில் எந்த பதக்கமும் வெல்லவில்லை.அந்த வரலாற்றை மாற்றும் முயற்சியுடன் வினேஷ் போகட் களமிறங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.