மறக்க முடியுமா.. 1972 ஒலிம்பிக் தொடரில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. பறிபோன 11 வீரர்களின் உயிர்!
சென்னை: ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது எப்போதும் ஒவ்வொரு நாட்டிற்கும் மிகப்பெரிய கவுரவமாகவும், பெருமையளிக்கக் கூடிய விஷயமாகவும் இருக்கும். ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதன் மூலமாக ஒவ்வொரு நாடுகளும் நட்புறவையும், பொருளாதார வளர்ச்சியையும், சுற்றுலாத் துறையையும், அன்பையும் வளர்த்து கொள்ள மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.
அந்த வகையில் 2ம் உலகப்போருக்கு பின் 1972ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடரை நடத்தி ஜெர்மனி புதிய அடையாளத்திற்குள் வருவதில் குறியாக இருந்தது. ஏனென்றால் 1936 ஒலிம்பிக்கை ஹிட்லர் பயன்படுத்தி கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன. அந்த வகையில் 1972ஆம் ஆண்டு ஜெர்மனியின் முனிச் நகரில் ஒலிம்பிக் தொடர் கோலாகலமாக தொடங்கியது. யூதர்களுக்கு எதிராக மிகப்பெரிய தாக்குதல்கள் நடந்த அதே இடத்தில், யூத வீரர், வீராங்கனைகள் ஏராளமானோர் பதக்கங்களை வென்று குவித்தனர்.

ஆனால் யார் கண் பட்டதோ, ஒலிம்பிக் தொடரின் 2வது வாரத்தில் அந்த அசம்பாவிதம் நடந்தது. செப்டம்பர் 5.. அதிகாலை நேரம்.. இஸ்ரேலியா வீரர்கள் தங்கியிருந்த விடுதிக்குள் சிலர் விளையாட்டு வீரர்களின் உடைகளை அணிந்து உள்ளே புகுந்தனர். அவர்களுக்கு பின் வந்த சிலரின் கைகளில் துப்பாக்கிகள் இருந்ததை அறிந்த மல்யுத்த போட்டிகளுக்கான நடுவர் யூசுப், உடனடியாக மற்ற வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்தார். ஆனாலும் அங்கு பயிற்சியாளர் வெய்ன்பர்க் மற்றும் மல்யுத்த வீரர் ஆகிய 2 பேரையும் சுட்டுக் கொன்றனர்.
அதுமட்டுமல்லாமல் 9 இஸ்ரேல் வீரர், வீராங்கனைகளை பிணைக் கைதிகாக பிடித்தனர். இதனால் உலகமே அதிர்ச்சியடைந்தது. இதன்பின் வீரர்கள் தங்கியிருந்த விடுதி சுற்றி வளைக்கப்பட, விடுதிக்குள் புகுந்த பயங்கரவாதிகள் பாலீஸ்தனத்தை சேர்ந்த பிளாக் செப்டம்பர் குழுவினைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் தரப்பில் இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆனால் பயங்கரவாதிகளின் கோரிக்கைக்கு இஸ்ரேல் அரசு பணிந்து வரவில்லை.
இஸ்ரேல் சிறப்பு படை மூலமாக மீட்கலாம் என்று முயன்ற போது, ஜெர்மனி அரசு அதனை ஏற்கவில்லை. இந்த சம்பவம் நடந்த 13 மணி நேரத்திற்கு பின், பிளாக் செப்டம்பர் அமைப்பு தரப்பில் தங்களையும் பிணைக் கைதிகளையும் எகிப்தில் உள்ள கெய்ரோவுக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்தார்கள். ஒரு வழியாக ஜெர்மனி அரசு தரப்பில் பிளாக் செப்டம்பர் குழுவினரை அட்டாக் செய்து, விளையாட்டு வீரர்களை மீட்டு இஸ்ரேலிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால் விமான நிலையத்தில் ஜெர்மனி அரசு அட்டாக் செய்ய தொடங்கிய போதே, விளையாட்டு வீரர்களை சரமாரியாக சுட்டும், ஹெலிகாப்டர் மீது குண்டு வீசியும் பயங்கரவாத குழுவினர் கொன்றுவிட்டனர். இறுதியாக பிளாக் செப்டம்பர் குழுவைச் சேர்ந்த 3 பேர் உயிருடன் பிடிக்கப்பட்டனர். சுமார் 21 மணி நேர போராட்டத்திற்கு பின் ஒலிம்பிக் தொடர் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இதன்பின் ஒலிம்பிக் தொடரில் இருந்து ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் பாதியுடன் வெளியேறினார்கள். இன்று வரை இந்த பயங்கரவாத சம்பவம் ஒலிம்பிக் திருவிழாவின் கறுப்பு பக்கங்களில் முதன்மையானதாக உள்ளது.


Click it and Unblock the Notifications