பார்சிலோனா : ஒலிம்பிக் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவம் என்றால் அது 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற தந்தை மகனின் பாச போராட்டம் தான். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல ஒவ்வொரு வீரர்களும் நான்கு ஆண்டுகள் தவமிருந்து பயிற்சி செய்வார்கள். அப்படி ஒலிம்பிக் விளையாட்டுக்கு தயாராகும் நிலையில் போட்டி நேரத்தில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் அது அவர்களுக்கு எவ்வளவு பெரிய மனவலியை கொடுத்திருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் பார்சிலோனாவில் நடைபெற்ற 1992 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் நிகழ்ந்தது. ஒலிம்பிக்கில் நீங்கள் காலத்தால் அழியாமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் சாம்பியன் பட்டம் தான் வாங்க வேண்டும் என்று அல்ல.

ஒரு விளையாட்டு வீரராக போர் குணத்தையும், மனிதாபிமானத்தையும் வெளிப்படுத்தினாலே காலம் உங்களை என்றுமே மறக்காது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் 92 ஒலிம்பிக்கில் நடைபெற்றது. பிரிட்டன் வீரர் ரெட்மாண்ட் 400 மீட்டர் அரை இறுதி போட்டியில் பங்கேற்றார்.
பதக்கம் வெல்லும் வாய்ப்பு ரெட்மாண்டுக்கு இருந்தது. இறுதிப் போட்டிக்கு எப்படியாவது சென்று விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போட்டி தொடங்கிய சில தூரத்தில் ரெட்மாண்ட்க்கு திடீரென்று காலில் வலி ஏற்பட்டது. முதலில் தம்மை யாரோ சுட்டுவிட்டார்கள் என நினைத்ததாக கூறும் ரெட்மாண்ட், வலி தாங்க முடியாமல் மைதானத்திலே கதறி அழுத் தொடங்கினார்.
தமக்கு காயம் ஏற்பட்டதால் அடுத்த ஒரு அடியை கூட எடுத்து வைக்க முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. எனினும் அப்போதுதான் ரெட்மாண்ட் தன்னுடைய போர் குணத்தை வெளிப்படுத்தினார். நான் தோற்றாலும் பரவாயில்லை. காயம் அடைந்தாலும் பரவாயில்லை. பந்தய தூரத்தை நிச்சயம் நான் முடிப்பேன் என ரெட்மாண்ட், தன்னுடைய காயமடைந்த காலை வைத்து நொண்டி நொண்டி சென்றார்.
இதனைப் பார்த்த பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டினர். ரெட்மாண்ட் படும் கஷ்டத்தை தாங்க முடியாத அவருடைய தந்தை ஜிம் ரெட்மாண்ட் திடீரென்று பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து குதித்து, பரவாயில்லை வா இப்படி நீ ஓடுவதை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது என்று கூறினார். ஆனால் ரெட்மாண்ட் அதைக் கேட்கவே இல்லை.
இதனை அடுத்து தனது மகன் வைராக்கியத்தை நினைத்து பெருமை பட்டாலும் நமது மகனால் ஜெயிக்க முடியவில்லை என்ற வருத்தமும் தந்தை ஜிம் முகத்தில் இருந்தது. எனினும் மகன் பந்தய தூரத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக தன் தோளில் மகனைத் தாங்கியவாறு பந்தய தூரத்தை கடக்க ரெட்மாண்டின் தந்தை ஜிம் ரெட்மாண்ட் உதவினார். இதை அடுத்து இருவரும் பந்தய தூரத்தை கடந்தனர். இதை பார்த்த பலருக்கும் கண்களில் கண்ணீர் கொட்டியது. ஒலிம்பிக் வரலாற்றிலேயே மிகச் சிறந்த தருணங்களில் ஒன்றாக இது கருதப்பட்டது.