வரலாற்றில் முதல் முறையாக பெண்கள் மட்டுமே பங்கு பெறும் ரெஸ்லிங்!
சின்சினாட்டி : பிரபலமான WWE ரெஸ்லிங் நிறுவனம், பெண்களுக்கான பிரத்யேக சிறப்பு நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. இது பற்றிய அறிவிப்பை, தன் திங்கள் கிழமை நிகழ்ச்சியான “மண்டே நைட் ரா”வில் வெளியிட்டது.
சில நாட்களாக வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அறிவிப்பை WWE வெளியிட உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து WWE-ஐ நிர்வகித்து வரும் மிக்மேன் மற்றும் அவரது மகளும், இந்த பெண்கள் மட்டும் பங்கேற்கும் புதிய பே-பெர்-வியூ (Pay-Per-View, PPV) நிகழ்ச்சியான “WWE Evolution”-ஐ அறிவித்தனர். இந்த புதிய நிகழ்ச்சி வரும் அக்டோபர் 28 நடக்க உள்ளது. இந்த புதிய முயற்சி வெற்றி பெற்றால் தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு பெண்களுக்கான நிகழ்ச்சிகளை WWE விரிவுபடுத்தும் என கூறப்படுகிறது.

இந்த பெண்கள் ரெஸ்லிங் நிகழ்ச்சியில், WWE-இன் “மன்டே நைட் ரா”, “ஸ்மேக்டவுன்”, NXT, NXT UK ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வரும் பெண் வீராங்கனைகள், இந்த புதிய நிகழ்ச்சியில் நடக்கும் ரெஸ்லிங் போட்டிகளில் பங்கேற்பார்கள். “மே யங் கிளாசிக்” என்ற பெண்கள் ரெஸ்லிங் தொடரின் இறுதிப் போட்டியும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறும்.
WWE-இன் ஆரம்ப காலங்களில் பெண்கள், ஆண்களுக்கு இணையாக ரெஸ்லிங் போட்டிகளில் சண்டையிட்டு வந்தார்கள். அதன் பின், வியாபார நோக்கங்களுக்காக பெண்களை அழகு பதுமைகளாக “Divas” என்ற பெயரில் தங்கள் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி வந்தது. ஆனால், இதை பிடிக்காத ரசிகர்கள் பெண்களை மீண்டும் அதிரடியான ரெஸ்லிங் போட்டிகளில் பயன்படுத்துமாறும், வெறும் பதுமைகளாக பயன்படுத்துவதை நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்தனர்.
நீண்ட காலம் அதை கண்டு கொள்ளாத WWE, பின்னர் ரெஸ்லிங் திறமை உள்ள பெண்களை தன் நிகழ்ச்சியில் சிறிய அளவில் பயன்படுத்தி வந்தது. அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பெண்களுக்கான முக்கியத்துவத்தை தன் நிகழ்ச்சிகளில் அதிகப்படுத்தியது. அதன் உச்சகட்டமாக பெண்கள் மட்டும் பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சியை நடத்த உள்ளது. நம் இந்தியப் பெண்ணான கவிதா தேவி “மே யங் கிளாசிக்” தொடரில் பங்கேற்க உள்ளார். ஒருவேளை, அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால், அவரும் இந்த பெண்கள் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சண்டையிடுவார்.
Story first published: Tuesday, July 24, 2018, 20:33 [IST]
Other articles published on Jul 24, 2018


Click it and Unblock the Notifications