தேசிய பாரா விளையாட்டுப் வீரர் சுட்டுக் கொலை.. ஆசிய விளையாட்டுக்கு தகுதி பெற்ற 2 நாளில் பயங்கரம்
காசியாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் தேசிய அளவிலான பாரா தடகள வீரர் சிராக் தியாகி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெற்ற இரண்டே நாட்களில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.
தங்கப் பதக்கம் வென்ற நாயகன் உத்தரப் பிரதேச மாநிலம் முராத்நகரைச் சேர்ந்தவர் சிராக் தியாகி.
பாரா தடகள வீரரான இவர், சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்றார். அதில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த வெற்றியின் மூலம், இந்த ஆண்டு இறுதியில் ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் தகுதியைப் பெற்றிருந்தார். தனது லட்சியப் பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய மகிழ்ச்சியில் இருந்த நிலையிலேயே அவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சிராக் தியாகி டெல்லியில் உள்ள தடகளப் பயிற்சி விடுதியில் தங்கிப் பயிற்சி பெற்று வந்தார். சனிக்கிழமையன்று தனது கிராமத்திற்குச் செல்வதற்காக அவர் விடுதியிலிருந்து புறப்பட்டார். ஆனால், அவர் கிராமத்திற்குச் சென்று சேரவில்லை. காசியாபாத்தில் உள்ள சாய் உபவன் என்ற பகுதியில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். மதியம் 3 மணி அளவில் அந்த வழியாகச் சென்றவர்கள் இது குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிராக் தியாகியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடங்கினர். அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு நபர் மீது போலீசாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
சக வீரர் கைது அதன் அடிப்படையில் நடத்திய விசாரணையில், சிராக் தியாகியுடன் பயிற்சி பெற்று வந்த மற்றொரு பாரா தடகள வீரரை போலீசார் பிடித்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், அந்த வீரரே சிராக் தியாகியைச் சுட்டுக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீரரைப் போலீசார் கைது செய்தனர். அவரிடம் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விளையாட்டுப் போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட காரணங்கள் உள்ளனவா என்பது குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தடகளப் போட்டியில் சிராக் தியாகி சிறப்பாகச் செயல்பட்டு ஆசியப் போட்டிக்குத் தகுதி பெற்றதால், ஏற்பட்ட பொறாமை காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
சிராக் தியாகியின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆசியப் போட்டியில் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில், சக வீரராலேயே அவர் கொல்லப்பட்ட சம்பவம் இந்திய விளையாட்டுத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
