பாராலிம்பிக் 2024 - பதக்கப் பட்டியலில் இந்தியா சாதனை.. ஒரே நாளில் 6 இடங்கள் முன்னேற்றம்
பாரிஸ் : பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை இல்லாத அளவு அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கிறது. பாரா ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா டோக்கியோவில் நடைபெற்ற 2020 பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தான் அதிகபட்சமாக 18 பதக்கங்களை வென்றது.
இந்த நிலையில் இம்முறை அதிக வீராங்கனைகள் பங்கேற்று இருப்பதால் இந்தியா இந்த சாதனையை முறியடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். நேற்று இந்திய அணி பதக்கப் பட்டியலில் 19வது இடத்தை பிடித்திருந்தது. அதன் பிறகு பாரா வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங்,போலாந்து வீரர் லூக்காசை ஆறுக்கு பூஜ்ஜியம் என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்து கிளப் த்ரோ எப் 51 என்ற போட்டியில் இந்திய வீரர் தரம்பீர் சிங் 34.92 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். அதே போட்டியில் இந்தியாவின் பிரணவ் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார். இதேபோன்று குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் சச்சின் கிளாரி 16.32 மீட்டர் தூரம் வீசி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.
இதன் மூலம் இந்தியா ஒரே நாளில் இரண்டு தங்கப் பதக்கத்தை கைப்பற்றியதை அடுத்து பதக்க பட்டியலில் ஆறு இடங்கள் முன்னேறி 13-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 5 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை கைப்பற்றி பட்டியலில் 13வது இடத்தை பிடித்திருக்கிறது. சீனா 62 தங்கம், 46 வெள்ளி, 27 வெண்கலம் என 135 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், பிரிட்டன் 33 தங்கம், 25 வெள்ளி, 16 வெண்கலம் என 74 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா 25 தங்கம், 26 வெள்ளி, 12 வெண்கலம் என 63 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இன்றைய ஆட்டத்தில் பாரா பவர் லிப்டிங் பிரிவில் இந்திய வீரர் அசோக் 65 கிலோ எடைப்பரிவில் பங்கேற்கிறார். இந்த போட்டி இரவு 10.05 மணிக்கு நடைபெறுகிறது. இதேபோன்று இரவு 11: 50 மணிக்கு குண்டு எறிதல் போட்டியில் இறுதிச்சுற்று இந்திய வீரர் அரவிந்த் பங்கேற்கிறார். அது மட்டும் இல்லாமல் ஜூடோ கலப்பு துப்பாக்கிச் சூடு 50 மீட்டர் பிரிவு மற்றும் பாரா ஜூடோ மற்றும் பாரா வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவு ஆகிய போட்டிகள் நடக்கின்றன. இதிலும் இந்தியா தங்கம் வென்றால் பதக்கப் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications