தங்கம், வெள்ளி, வெண்கலம்.. இந்தியாவை பெருமைப்படுத்திய பாராலிம்பிக் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
டெல்லி: 2024 பாராலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு 29 பதக்கங்களை வென்று கொடுத்த வீரர், வீராங்கனைகள் இன்று நாடு திரும்பினர். அவர்கள் அனைவருக்கும் டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் வந்து இறங்கிய இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மேள, தாளங்களுடன் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாராலிம்பிக் வரலாற்றிலேயே இந்தியா அதிக அளவு பதக்கங்களை வென்று சாதனை படைத்து இருந்தது. கடந்த 2021 டோக்கியோ பாராலிம்பிக் தொடரில் இந்தியா 19 பதக்கங்கள் வென்று இருந்தது. அதுவே வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்ச பதக்கமாக இருந்தது. அந்த எண்ணிக்கையை இந்த முறை முந்திய இந்திய வீரர்கள் மொத்தம் 29 பதக்கங்களை வென்று அசத்தினர்.

7 தங்கப் பதக்கம், 9 வெள்ளிப் பதக்கம் மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களை இந்திய பாராலிம்பிக் வீரர்கள் வென்றனர். இதில் மூன்று தமிழக வீரர்களும் பதக்கம் வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. பாரா பேட்மிண்டனில் துளசிமதி முருகேசன், வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தார். மற்றொரு பாரா பேட்மிண்டன் பிரிவில் நித்தியஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கம் வென்று இருந்தார்.
உயரம் தாண்டுதலில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் வெண்கலப் பதக்கம் வென்றார். தொடர்ந்து மூன்று பாராலிம்பிக் தொடர்களில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் செய்தார் மாரியப்பன். இவர்கள் அனைவரும் நாடு திரும்பிய நிலையில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா 29 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 18 வது இடத்தை பிடித்தது. இதுவே பாராலிம்பிக் தொடரில் இந்தியாவின் சிறந்த தரவரிசையாகும். பாராலிம்பிக் வீரர்களுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டாலும் 2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்தது போல இல்லை என்றாலும் 10,000 பேராவது வந்திருக்கலாம் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இந்திய மக்கள் 29 பதக்கம் என்ற வீரர்களை விட 11 ஆண்டுகளுக்கு பின் ஒரு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியை பெரிதாக கொண்டாடியது ஏன்? என சிலர் கேள்வி எழுப்பி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications