பாரிஸ்: 2024 பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் இந்தியாவின் நவ்தீப் சிங் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். இந்த போட்டியில் சர்ச்சை ஒன்று வெடித்தது.
இந்த இறுதிப் போட்டியின் முடிவில் நவ்தீப் சிங் 47.32 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து இரண்டாவது இடம் பிடித்திருந்தார். அதன் மூலம் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஈரான் வீரர் சாடேக் பெயிட் சாயா 47.64 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி முதல் இடம் பிடித்து இருந்தார் அவருக்கு தங்கப் பதக்கம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அவர் தங்கம் வென்றதை கொண்டாடினார். அப்போது அவர் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் கொடியை வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தெரியவந்தது. பாராலிம்பிக் விதிகளின்படி இது தவறு என்பதால் அவரது தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டது. அவர் ஈட்டி எறிதல் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார்.
அதன் பின் வெள்ளிப் பதக்கம் வென்ற நவ்தீப் சிங் தங்கப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. நவ்தீப் சிங் வீசிய 47.32 மீட்டர் தூரம் தான் அவரது மிகச்சிறந்த எறிதல் ஆகும். பாராலிம்பிக் இறுதிப் போட்டியில் தனது சிறந்த ஈட்டி எறிதல் பதிவு செய்து சாதனை படைத்து இருந்தார். எனினும், தங்கப் பதக்கம் கிடைக்கவில்லையே, வெறும் 0.32 மீட்டர் தூரத்தில் தங்கப் பதக்கம் பறிபோனதே என இந்திய ரசிகர்கள் சோகத்தில் இருந்த நிலையில் ஈரான் வீரர் தவறான செயலால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது.
நவ்தீப் வென்ற இந்தப் பதக்கம் 2024 பாராலிம்பிக் தொடரில் இந்தியாவின் ஏழாவது தங்கப் பதக்கம் ஆகும். இதன் மூலம் இந்தியா ஒட்டுமொத்தமாக 29 பதக்கங்களை வென்று உள்ளது. இந்தியா தற்போது பதக்க பட்டியலில் 16வது இடத்தில் உள்ளது.