பாரிஸ்: பாரிஸில் இன்று முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை பாராலிம்பிக்ஸ் தொடர் கோலாகலமாக நடக்கவுள்ளது. கடந்த முறை இந்தியா சார்பாக 54 வீரர்கள், வீராங்கனைகள் அனுப்பப்பட்டிருந்த நிலையில், இம்முறை 52 வீரர்கள், 32 வீராங்கனைகள் என்று மொத்தமாக 84 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். இதனால் கடந்த முறையை காட்டிலும் இந்தியா இம்முறை கூடுதல் பதக்கங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கலாம்.
கடந்த முறை இந்திய வீரர்கள், வீராங்கனைகள் 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என்று மொத்தமாக 19 பதக்கங்களை வென்று 24வது இடத்தில் நிறைவு செய்திருந்தது. இந்த நிலையில் பாரிஸ் பாராலிம்பிக்ஸ் தொடருக்கான தொடக்க விழாவை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பாரிஸில் முதல்முறையாக பாராலிம்பிக்ஸ் தொடர் நடக்கவுள்ளது.

இதனால் ஒலிம்பிக் தொடரை போலவே பாராலிம்பிக்ஸ் தொடருக்கான தொடக்க விழாவையும் மைதானத்திற்கு வெளியே நடத்த திட்டமிட்டுள்ளது. ஒலிம்பிக் தொடருக்கான தொடக்க விழாவை இயக்கிய தாமஸ் ஜாலி தான் இதனையும் இயக்கவுள்ளார். இந்த பாராலிம்பிக் தொடக்க விழா சாம்ப்ஸ் - எலிஸில் தொடங்கி பிளேஸ் டி லா கான்கர்ட்-ல் நிறைவடையவுள்ளது.
இந்த இரு பகுதிகளுக்கு இடையிலான பகுதியை பாரிஸின் இதயம் என்று சொல்வார்கள். அப்படியான இடத்தில் தொடக்க விழாவை பிரான்ஸ் அரசு நடத்த முடிவு செய்திருக்கிறது. இந்த தொடக்க விழாவில் இந்தியா சார்பாக ஈட்டி எறிதல் வீரர் சுமித் ஆண்டில் மற்றும் குண்டு எறிதல் வீராங்கனை பாக்யஸ்ரீ யாதவ் இருவரும் இந்திய தேசியக் கொடியை வழிநடத்தவுள்ளனர்.
நாளைய போட்டியில் பங்கு பெறவிருக்கும் இந்திய வீரர்கள் இந்த தொடக்க விழாவில் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிய வந்துள்ளது. இதனால் துப்பாக்கிச் சுடுதல் அணியில் உள்ள 10 பேரும் பங்கேற்க மாட்டார்கள். மேலும் பாரிஸ் பாராலிம்பிக்ஸ் தொடக்க விழா பிரான்ஸ் நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கும் என்று தெரிய வருகிறது. இதனை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் நேரலையாக காண முடியும். அதேபோல் ஓடிடியை பொறுத்தவரை ஜியோ சினிமாஸ் செயலியில் இலசவமாக காணலாம். இதனால் ஒலிம்பிக் தொடரை போல் ரசிகர்கள் பாராலிம்பிக்ஸ் தொடருக்கும் ஆதரவளிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.