சென்னை : வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு அடி பாதாளத்திற்கு சென்றாலும், தன்னம்பிக்கையை மட்டும் விடாமல் தொடர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு பாரா ஒலிம்பிக் போட்டியில் மூன்று பதக்கம் வென்ற மாரியப்பன் ஒரு நல்ல எடுத்துக்காட்டாவார். மாரியப்பன் வாழ்க்கையில் படக்கூடாத கஷ்டங்களை எல்லாம் பட்டிருக்கிறார்.
சரியான பயிற்சி சரியான வழிகாட்டுதல் மற்றும் விடாமுயற்சி இருந்தால் ஒரு மனிதனால் எந்த உயரத்திற்கும் செல்ல முடியும் என்பதற்கு மாரியப்பன் ஒரு உதாரணம். சேலம் மாவட்டம் பெரிய வடகம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்தான் மாரியப்பன்.

மாரியப்பனுக்கு நான்கு சகோதரர் ஒரு சகோதரி என கூடப்பிறந்தவர்கள் உள்ளனர். இவருடைய தந்தை சிறுவயதில் குடும்பத்தை பாதியில் விட்டுவிட்டு சென்றிருக்கிறார். இதனால் தாய் சரோஜா தான் தன்னுடைய 6 குழந்தைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்திருக்கிறார். தொழிலாளராக சரோஜா வாங்கும் சம்பளத்தை வைத்து தான் ஆறு பேரையும் வளர்த்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் மாரியப்பனுக்கு மிகப்பெரிய ஒரு சோதனை ஏற்பட்டது. மாரியப்பனுக்கு ஐந்து வயதாக இருக்கும் போது மாரியப்பன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்தை இயக்கி வந்த ஒரு ஓட்டுநர் குடிபோதையில் இருந்திருக்கிறார். அவர் மாரியப்பன் மீது இடித்து பேருந்து அவருடைய காலில் ஏறி இருக்கிறது. இதில் மாரியப்பனின் கால் எலும்பு சுக்குநூறாக உடைந்து முற்றிலும் அவர் காலை இழக்கும் நிலை ஏற்பட்டது.
இதனால் மாரியப்பன் நடக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். ஏற்கனவே ஏழ்மையில் இருந்த தாய் சரோஜா, மாரியப்பனை அரவணைத்து அவரை வளர்த்தார். இந்த நிலையில் மாரியப்பன் தன்னுடைய விடாமுயற்சியால் மேல்நிலைப்பள்ளி வரை சென்று படிப்பை முடித்தார். அப்போது மாரியப்பனுக்கு பள்ளியில் வாலிபால் விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்குமாம்.
அப்போது பள்ளி ஆசிரியர் ஒருவர் அறிவுறுத்தல் படி மாரியப்பன் உயரம் தாண்டுதலில் ஈடுபட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அப்போது சத்திய நாராயணா என்ற பயிற்சியாளர் மாரியப்பனின் திறமையை கண்டெடுத்து அவரை மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா தடகள போட்டியில் பங்கேற்க உதவியிருக்கிறார்.
இதனை அடுத்து தன்னுடைய மாணவனாக சத்திய நாராயணன் மாரியப்பனை அரவணைத்து பெங்களூருக்கு அழைத்து சென்று அவருக்கு வேண்டிய பயிற்சிகளை கொடுத்திருக்கிறார். இதில் மாரியப்பன் நன்கு கைதேர்ந்து தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார். இதை அடுத்து மார்ச் மாதம் 2016 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற ஒரு போட்டியில் பங்கு பெற்று பாரா ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்றார்.
இதனை அடுத்து ரியோ 2016 பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் தங்க பதக்கம் என்று சாதனை படைத்தார். அப்போது மாரியப்பனுக்கு பல்வேறு பரிசு பொருட்கள் கிடைத்தது. தமிழ்நாடு அரசு இவருக்கு 2 கோடி ரூபாய் பரிசு தொகையை வழங்கியது. இதனை வைத்து தன்னுடைய குடும்பத்தை மாரியப்பன் பார்த்துக்கொண்டார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய தாய்க்காக ஒரு விவசாய நிலத்தை வாங்கி கொடுத்திருக்கிறார்.
தற்போது தனது தாய் வேறு எங்கேயும் வேலைக்கு செல்லாமல் விவசாயம் பார்த்துக் கொண்டு அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து வாழ்கின்றனர். மேலும் மாரியப்பன் தனது குடும்பத்திற்காக ஒரு வீட்டையும் கட்டி அதில் வாழ்ந்து வருகிறார். மாரியப்பன் பன்னிரண்டாம் வகுப்பு நிறுத்தாமல் தொடர்ந்து கல்லூரிக்கும் சென்று பிபிஏ படித்தார்.
இதனைத் தொடர்ந்து மாரியப்பன் 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்றார் ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் என செல்லும் இடமெல்லாம் மாரியப்பனுக்கு பரிசு கிடைத்தது. உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் மாரியப்பன் தங்கம் வெண்கலம் என்ற பதக்கத்தை வாங்கி இருக்கிறார்.
தற்போது 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியிலும் மாரியப்பன் வெண்கலம் வென்று மூன்று பாரா ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். மாரியப்பனுக்கு விளையாட்டு துறையில் மிகப்பெரிய விருதான தயா சந்த் விருதும் வழங்கப்பட்டிருக்கிறது.