Olympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூன் 26 தேதி தொடங்கி தற்போது அனைத்து போட்டிகளும் நிறைவு பெற்று விட்டன. இதில் 32 விளையாட்டில் 329 பிரிவுகளில் போட்டி நடைபெற்று முடிவடைந்து இருக்கிறது. இதில் கடைசி நாளான இன்று 22 பதக்கங்களுக்கான போட்டி நடைபெற்றது.
இந்த சூழலில் கடைசி நிமிடம் வரை சீனா பதக்கப் பட்டியலில் 40 தங்கத்துடன் முதலிடத்தில் இருந்தது.
அமெரிக்கா 39 தங்கத்துடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. இந்த நிலையில் மகளிருக்கான கூடைப்பந்து போட்டி கடைசியாக நடந்தது.

இதில் பிரான்சை வீழ்த்தி அமெரிக்கா தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.இதன் மூலம் அனைத்து போட்டிகளும் முடிவடைந்த நிலையில் அமெரிக்கா மீண்டும் முதலிடத்தை பிடித்தது. 40 தங்கம்,44 வெள்ளி, 42 வெண்கலம் என 126 பதக்கத்துடன் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. சீனா 40 தங்கம், 27 வெள்ளி,24 வெண்கலம் என 91 பதக்கத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஜப்பான் 20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என 45 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 18 தங்கம், 19 வெள்ளி பதினாறு வெண்கலம் என 53 பதக்கங்களுடன் நான்காவது இடத்திலும், போட்டியை நடத்திய பிரான்ஸ் 16 தங்கம், 26 வெள்ளி, 22 வெண்கலம் என 64 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இந்தப் பட்டியலில் இந்தியா ஒரு வெள்ளி, ஐந்து வெண்கலம் என மொத்தம் ஆறு பதக்கத்துடன் 71 வது இடத்தை பிடித்தது.
ஒருவேளை வினேஷ் போகத்துக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தால் இந்தியா 68வது இடத்திற்கு முன்னேறும். பாகிஸ்தான் ஒரு தங்கத்துடன் பதக்கப்பட்டியலில் 62வது இடத்தில் இருக்கிறது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம் 2 வெள்ளி 4 வெண்கலம் என ஏழு பதக்கத்துடன் இந்தியா 48வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது 6 பதக்கத்துடன் 71 வது இடத்திற்கு சரிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.