நாட்டுக்கோழி கறி, நாட்டுமாட்டு நெய்.. இளந்தாரி டயட்டை வைத்து தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர்
மும்பை: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடும் போட்டி இருந்தது. இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார். இந்த நிலையில் இவர்கள் இருவரின் உணவு முறை என்ன என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதில் அர்ஷத் நதீம் கிராமத்து உணவு முறையை பின்பற்றி இருக்கிறார். நீரஜ் சோப்ரா ஊட்டச்சத்து நிபுணர்களின் உதவியுடன் நவீன உணவு முறையை பின்பற்றி இருக்கிறார். சில ஆண்டுகள் முன்பு, "இளந்தாரி பையன் நாட்டுக்கோழி சாறு சாப்பிட்டால் எவனை தூக்கிப் போட்டு மிதிக்கலாம்னு இருக்கும்" என்ற திரைப்படக் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் மக்களை ஈர்த்தது நினைவு இருக்கலாம். கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு உணவு முறையைத்தான் அர்ஷத் நதீம் பின்பற்றி இருக்கிறார்.

நாட்டுக்கோழி இறைச்சி, நாட்டுக்கோழி முட்டை மற்றும் நாட்டு மாட்டு பசு நெய் ஆகியவற்றை அவர் உணவாக எடுத்துக் கொண்டுள்ளார். இத்துடன் லஸ்ஸி கிடைத்தால் அதையும் அதிக அளவில் அருந்தி இருக்கிறார். மற்றபடி அவர் கடும் கட்டுப்பாடான உணவு முறையை வைத்துக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் இது அவருக்கு உடல் உறுதியை அளித்ததோடு அவர் 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி ஒலிம்பிக் சாதனையும் செய்தார். மறுபுறம் நீரஜ் சோப்ரா தனது உடல் எடையில் 10 சதவீதம் மட்டுமே கொழுப்பு இருக்க வேண்டும் என கணக்கிட்டு, அதிக புரதச் சத்து கொண்ட உணவு முறையை ஊட்டச்சத்து நிபுணரின் உதவியுடன் மூன்று வேளையும் எடுத்துக் கொண்டு வருகிறார்.
காலை நேரத்தில் பழங்கள், தயிர், ஓட்ஸ், முட்டையின் வெள்ளை கரு மற்றும் பிரெட் ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொள்கிறார். அத்துடன், ஏதேனும் பழச்சாறு அல்லது இளநீரை எடுத்துக் கொள்கிறார். மதிய நேரத்தில் தயிர், சோறு, பருப்பு, காய்கறிகள், சிக்கன் மற்றும் சாலட் ஆகிய உணவுகளை எடுத்துக் கொள்கிறார்.
இடையே வாழைப்பழங்கள் மற்றும் பழச்சாறுகளை எடுத்துக் கொள்கிறார். இரவு நேரத்தில் மாவுச் சத்து உள்ள பொருட்களை தவிர்த்து விட்டு காய்கறிகள் மற்றும் புரதச்சத்துக்கு தேவையான உணவுகளை எடுத்துக் கொள்கிறார். இருவரின் உணவு முறைகளுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஆனால், மிக எளிமையான "இளந்தாரி உணவு முறையை" கடைப்பிடித்து பதக்கத்தை வென்று இருக்கிறார் அர்ஷத் நதீம்.
நகரத்தில் வசிக்கும் பலருக்கு நாட்டுக் கோழிக்கும், பிராய்லர் கோழிக்குமான வித்தியாசம் தெரிவதில்லை. எது நாட்டுக் கோழி என்பது கூட பலருக்கு தெரியாத நிலையே உள்ளது. ஆனால், உண்மையான நாட்டுக் கோழியில் மருத்துவ குணங்கள் அதிக அளவில் உள்ளது. அதே போல, நாட்டு மாட்டு பாலில் அதிக சத்துக்கள் இருக்கின்றன. அதுவே அர்ஷத் நதீமுக்கு சர்வதேச அளவில் போட்டியிட போதுமான ஊட்டச்சத்தாக இருந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications