ஒலிம்பிக் - தங்கம் வென்ற பாகிஸ்தான் மருமகனுக்கு எருமை பரிசு.. அர்ஷத் நதீம் கிராமத்தில் சுவாரசியம்
லாகூர்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு எருமை மாடு பரிசாக அளிக்கப்பட்டு இருக்கிறது. அதை அளித்தது அவரது மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஷத் நதீமுக்கு பாகிஸ்தான் அரசு மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பல லட்சங்களை பரிசாக அளித்து வருகின்றன. இந்த நிலையில், அவரது மாமனார் அவருக்கு எருமை மாடு ஒன்றை பரிசாக அளித்து ஆச்சரியத்தை அளித்து இருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்பதையும் அவர் விவரித்து இருக்கிறார்.

அர்ஷத் நதீம் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். அங்கு உள்ள கானேவால் என்ற கிராமப் பகுதியை சேர்ந்தவர். அதே கிராமத்தைச் சேர்ந்த நவாஸ் என்பவரின் இளைய மகள் ஆயிஷாவைத் தான் அர்ஷத் நதீம் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மூன்று குழந்தைகளும் உள்ளன.
குடும்ப வாழ்க்கை ஒரு புறம் இருக்க தனது ஈட்டி எறிதல் விளையாட்டில் அவர் தீவிரமாக ஈடுபட்டு தற்போது ஒலிம்பிக் சாதனை படைத்து தங்கப் பதக்கத்தையும் வென்று இருக்கிறார். மிகவும் கடினமான சூழ்நிலையில் போராடி முன்னேறி இருக்கிறார்.
தனது சொந்த முயற்சியால் தற்போது ஒலிம்பிக் தொடரில் 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி ஒலிம்பிக் சாதனை செய்து பாகிஸ்தானுக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் அவர் நாடு திரும்பிய போது கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு பலரும் பரிசுப் பணத்தை அறிவித்தனர்.
இந்த நிலையில் அவரது மாமனார் அவருக்கு எருமை மாடு ஒன்றை பரிசளித்து இருக்கிறார். அது குறித்து அவர் பேசிய போது, "எருமை மாடை பரிசளிப்பது என்பது ஒருவருக்கு அதிக செல்வமும், மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டும் என்பதற்கான அடையாளம். எங்கள் கிராமத்தில் இதுதான் நடைமுறை. அதனால், எனது மருமகனுக்கு எருமை மாட்டை பரிசளித்தேன்." என்று அவர் கூறி இருக்கிறார்.
நீரஜ் சோப்ரா பயிற்சிக்கு ரூ.5.72 கோடி செலவு.. வினேஷ் போகத் பயிற்சிக்கு எவ்வளவு செலவு தெரியுமா?
இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 89.45 மீட்டர் மட்டுமே வீசி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதற்கு முன் ஒலிம்பிக்கில் 90 மீட்டர்கள் மட்டுமே வீசப்பட்டிருந்த நிலையில் அர்ஷத் நதீம் அந்த சாதனையை முறியடித்து 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications