மும்பை: நீரஜ் சோப்ராவின் தங்கம் வென்ற ஈட்டியை இந்திய அளவில் கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் பிசிசிஐ அமைப்பு சுமார் 1.5 கோடி விலை கொடுத்து வாங்கியது. இந்த சம்பவம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார்.
ஈட்டி எறிதலில் இந்தியாவுக்காக முதல் தங்கம் வென்ற சாதனையை அவர் செய்தார். மேலும், தடகளத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கமும் அதுதான். அப்போது அவர் 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி தங்கப் பதக்கத்தை வென்று இருந்தார்.

அதன் பின்னர், பிரதமர் நரேந்திர மோடி கங்கையை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு நிதி திரட்டுவதற்கு அவரிடம் இருந்த பொருட்களை ஏலம் விட்ட போது, அதில் நீரஜ் சோப்ராவின் ஈட்டியும் இடம் பெற்றது. 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பின் நாடு திரும்பிய நீரஜ் சோப்ரா தான் ஒலிம்பிக்கில் பயன்படுத்திய ஈட்டிகளில் ஒன்றை பிரதமர் மோடிக்கு பரிசளித்து இருந்தார்.
அந்த ஈட்டிதான் பின்னர் ஏலத்தில் விடப்பட்டது. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ அந்த ஏலத்தில் பங்கேற்று சில பொருட்களை வாங்கியது. அப்போது நீரஜ் சோப்ராவின் ஈட்டிக்கு சுமார் 1.5 கோடி ரூபாய் கொடுத்தது பிசிசிஐ. அந்த தகவல் சில மாதங்கள் கழித்து செய்திகளில் வெளியானது.
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரிலும் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்றார். பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி ஒலிம்பிக் சாதனை படைத்ததோடு தங்கப் பதக்கத்தையும் வென்றார். எனினும், நீரஜ் சோப்ரா முந்தைய ஒலிம்பிக்கை விட கூடுதல் தூரம் ஈட்டியை வீசி இருந்தார். பாரிஸில் 89.45 தூரம் ஈட்டியை வீசி இருந்தார் நீரஜ் சோப்ரா.
2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியா மொத்தம் ஆறு பதக்கங்களை மட்டுமே வென்று இருக்கிறது. ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்களை மட்டுமே இந்தியா வென்றது. நீரஜ் சோப்ரா வென்ற வெள்ளிப் பதக்கம் மட்டுமே இந்தியாவுக்கு ஆறுதலாக அமைந்தது.