ஒலிம்பிக்- இந்தியா தங்கம் வெல்ல கடைசி வாய்ப்பு இருக்கா? பதக்கப் பட்டியலில் பெரும் பின்னடைவு
பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை ஆறு பதக்கங்கள் வென்று இருக்கும் போதும், பதக்கப் பட்டியலில் மிகவும் பின்தங்கி உள்ளது. தற்போது பதக்கப் பட்டியலில் இந்தியா 69 வது இடத்தில் உள்ளது. இப்போதைய சூழ்நிலையில் இந்தியா பதக்கப் பட்டியலின் தர வரிசையில் முன்னேற வேண்டும் என்றால் நிச்சயமாக ஒரு தங்கப் பதக்கமாவது வென்றால் மட்டுமே அது முடியும்.
2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு இன்னும் இரண்டு விளையாட்டுகள் மட்டுமே மீதம் உள்ளன. அதில் இந்தியா ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றால் கூட பதக்கப் பட்டியலில் 64வது இடத்தை மட்டுமே பெற முடியும். அதே சமயம், இந்தியா ஒரு தங்கப் பதக்கத்தை வென்றால் 45 வது இடத்துக்கு முன்னேற முடியும். அதற்கான வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து பார்ப்போம்.

தற்போது இந்தியாவுக்கு மகளிர் கோல்ஃப் மற்றும் மகளிர் 76 கிலோ மல்யுத்த போட்டி மட்டுமே மீதம் உள்ளன. கோல்ஃப் விளையாட்டில் மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக் பிரிவில் இந்தியாவின் தீக்ஷா தாகர் மற்றும் அதிதி அசோக் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. ஏனெனில், ஒலிம்பிக் கோல்ஃப் விளையாட்டில் உலக அளவில் இவர்களை காட்டிலும் முன்னணி வீராங்கனைகள் பலர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், ஒரே சுற்றில் பல நாடுகளை சேர்ந்தவர்களுடன் இவர்கள் போட்டியிட வேண்டும் என்பதால் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. மல்யுத்தப் போட்டியில் 76 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் ரீத்திகா ஹூடா பங்கேற்றார். அவர் கள் இறுதி சுற்றில் கிர்கிஸ்தான் வீராங்கனை ஐபேரி மேடட்-க்கு எதிராக தோல்வி அடைந்தார். இதை அடுத்து மல்யுத்தத்தில் இந்தியா வெள்ளி அல்லது தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.
ஒருவேளை ஐபேரி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் மல்யுத்த விளையாட்டின் விதிகளின்படி ரீத்திகா மறுவாய்ப்பாக ஒரு போட்டியில் பங்கேற்பார். அந்தப் போட்டியில் வென்றால் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த நிலையில் கோல்ஃப் விளையாட்டில் இந்தியா தங்கம் வெல்லவில்லை என்றால் இந்தியாவின் தங்கப் பதக்க கனவு முடிவுக்கு வந்துவிடும். பதக்கப் பட்டியலிலும் இந்தியா பின்தங்க வேண்டிய நிலை ஏற்படும்.


Click it and Unblock the Notifications