ஒலிம்பிக் - "தங்கம் வென்ற மங்கையே என் காதலை ஏற்றுக் கொள்".. சீன வீராங்கனையை கவர்ந்த காதலன்
பாரிஸ் : ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பின்னர், சீனாவின் பேட்மிண்டன் வீராங்கனை ஹுவாங் யாகியாங் தனது காதலர் லியு யுசெனிடம் திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்ட சம்பவம் உலகையே கவர்ந்துள்ளது. இருவருமே பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் விளையாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கலப்பு இரட்டையர் பிரிவில் சீனாவிற்கு தங்கம் வென்ற ஹுவாங் யாகியாங், பதக்கம் வென்ற உற்சாகத்தில் இருந்தபோது, அவரது காதலர் லியு யுசென் களத்தில் இருந்தே திருமணம் செய்து கொள்ளுமாறு அவரிடம் கேட்டார். மோதிரத்துடன் மண்டியிட்டு கேட்ட லியு, திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட போது, ஹுவாங் ஆனந்தக் கண்ணீருடன் "ஆம்" எனக் கூறினார்.

இது குறித்து பேசிய ஹுவாங், "தங்கம் வென்றதால் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது எங்கள் பயணத்திற்கான அங்கீகாரம். என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஒலிம்பிக் சாம்பியனாக மாறுவதற்காக பயிற்சியில் கவனம் செலுத்தி வந்தேன். இதை எதிர்பார்க்கவில்லை" என்றார்.

ஹுவாங் தங்கம் வென்றாலும், அவருடன் இணைந்து ஆடிய லியுவுக்கு போட்டி சற்று கடினமாக இருந்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் போட்டியிட்ட அவர், முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தார். இது தனது கடைசி ஒலிம்பிக் போட்டி என்றும், அதனால் அதை பயன்படுத்திக் கொண்டு அனைவர் முன்பும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஹுவாங்-கிடம் கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

"இது என் கடைசி ஒலிம்பிக் போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே, அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன். ஏனென்றால், எங்கள் குடும்பத்தினர் இங்கு கூடி இருந்தது எனக்கு தைரியத்தை அளித்தது. குடும்பத்தினரைத் தவிர, நிறைய ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் அரங்கில் இருந்தனர்" என்று லியு கூறினார்.


Click it and Unblock the Notifications