2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியா வென்ற மொத்த பதக்கங்கள் எத்தனை? எந்த விளையாட்டில் பதக்கம்?
பாரிஸ்: 2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் அனைத்து போட்டிகளும் முடிவுக்கு வந்துள்ளன. ஆகஸ்ட் 11 அன்று மற்ற நாடுகளுக்கு சில விளையாட்டுப் போட்டிகள் இருக்கும் நிலையில் இந்தியாவின் அனைத்து போட்டிகளும் ஆகஸ்ட் 10 அன்றே முடிவுக்கு வந்து உள்ளன. ஆகஸ்ட் 12 அன்று ஒலிம்பிக் நிறைவு விழா நடைபெற உள்ளது.
இந்தியா சார்பில் மொத்தம் 117 வீராங்கனைகள் இந்த ஒலிம்பிக் தொடரில் பங்கேற்ற நிலையில், அதில் ஆறு பதக்கங்கள் மட்டுமே இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இந்தியா ஒரு தங்கப் பதக்கம் கூட வெல்லவில்லை. ஒரு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்களை மட்டுமே வென்றது இந்தியா. இதன் மூலம் 2024 ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் 71 வது இடத்தில் உள்ளது.

ஆகஸ்ட் 11 அன்று மற்ற நாடுகளின் போட்டிகளும் முடிவுக்கு வந்த பின்னரே இந்தியாவின் நிலை என்ன என்பது முழுமையாக தெரியவரும். தற்போது 71 வது இடத்தில் இருக்கும் இந்தியா மேலும் சரிவை சந்திக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் எந்தெந்த விளையாட்டுக்களில், எந்தெந்த வீரர், வீராங்கனைகள் பதக்கம் வென்றார்கள் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பட்டியல்-
இந்திய ஹாக்கி அணி ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் களம் இறங்கி வெண்கலப் பதக்கம் வென்றது.
துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் இணைந்து வெண்கலப் பதக்கம் வென்றனர்.
துப்பாக்கி சுடுதல் ஆடவர் 50 மீட்டர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்றார்.
மல்யுத்தத்தில் ஆடவர் 57 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் அமன் செஹ்ராவத் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை :
வெண்கலம் - 5
வெள்ளி - 1
தங்கம் - 0
எந்த விளையாட்டில் எத்தனை பதக்கம் வென்றது இந்தியா?
துப்பாக்கி சுடுதல் - 3 வெண்கலம்
மல்யுத்தம் - 1 வெண்கலம்
ஹாக்கி - 1 வெண்கலம்
ஈட்டி எறிதல் - 1 வெள்ளி


Click it and Unblock the Notifications