32 வருட ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்தியாவுக்கு பின்னடைவு.. பதக்கப் பட்டியலில் என்ன நிலை?
பாரிஸ்: ஒலிம்பிக் வரலாற்றில் 32 ஆண்டுகளுக்கு பின் இந்தியா பதக்கப் பட்டியலில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. 2024 ஒலிம்பிக்கில் இந்தியாவின் போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் பதக்கப் பட்டியலில் பாகிஸ்தானை விட மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றுள்ளது இந்தியா.
2024 தொடரின் பதக்கப் பட்டியலில் இந்தியா 71 வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 62 ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் ஒரே ஒரு தங்கப்பதக்கம் மட்டும் வென்று, ஆறு பதக்கங்கள் வென்ற இந்தியாவை முந்தி உள்ளது. இந்தியா தங்கப் பதக்கம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 1992 ஆம் ஆண்டு இந்தியா ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் கூட வெல்லவில்லை. அப்போது பாகிஸ்தான் ஹாக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்று இருந்தது. அதன் மூலம் இந்தியாவை காட்டிலும் பாகிஸ்தான் பதக்கப் பட்டியலில் முன்னிலை பெற்றது.

அதன் பின் 32 ஆண்டுகளாக பாகிஸ்தான் ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் கூட வெல்லவில்லை. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் இந்தியா மொத்தம் 26 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றது. கடந்த நான்கு ஒலிம்பிக் தொடர்களில் மட்டும் இந்தியா 21 பதக்கங்களை வென்றுள்ளது. ஒலிம்பிக்கில் இந்தியா படிப்படியாக முன்னேறி வந்தது. ஆனால், இந்த முறை ஒரு தங்கப் பதக்கம் கூட வெல்லாதது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானின் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் தங்கப்பதக்கம் வென்றதால் அந்த நாடு தற்போது 62 வது இடத்தில் உள்ளது. இந்தியா 5 வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்று இருக்கிறது. அதனால், 71வது இடத்தில் உள்ளது.
இந்தியா பல்வேறு விளையாட்டுகளில் தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தது. மல்யுத்தத்தில் வினேஷ் போகட் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்த நிலையில், கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். ஒருவேளை அவர் அந்த போட்டியில் பங்கேற்று இருந்தால் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்திருக்கலாம்.
அதேபோல ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை. ஆறு முயற்சிகளில் அவர் ஒரு முறை மட்டுமே ஈட்டியை சரியாக வீசினார். மற்ற ஐந்து முறையும் அவர் தவறான முறையில் வீசியதால் அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவர் வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்றார். அடுத்து பளு தூக்குதலில் இந்தியா தங்கப்பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீரா பாய் சானு நான்காவது இடத்தை மட்டுமே பிடித்தார்.
இப்படி இந்திய அணி சில ஏமாற்றங்களை சந்தித்தது. அதன் காரணமாகவே தற்போது பதக்கப் பட்டியலில் 71 வது இடத்தில் உள்ளது. 32 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக்கில் பாகிஸ்தான் இந்தியாவை முந்தி உள்ளது.


Click it and Unblock the Notifications