பாரிஸ் : 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்தியாவின் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தும், அதிக எடை இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் அதிகாரிகள் அறிவித்தனர்.
மல்யுத்தத்தில் வினேஷ் போகத் 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்று இருந்ததால், 50 கிலோவுக்கு குறைவாகவே அவரது எடை இருக்க வேண்டும். ஆனால், எடை சரிபார்ப்பின் போது அவரது எடை 100 கிராம் அதிகமாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து, இந்திய ஒலிம்பிக் வீரர்கள் குழுவின் தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர்.தின்ஷா பார்டிவாலா இது குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார்.

எப்படி 100 கிராம் எடை அதிகரித்தது? எடை குறைப்புக்காக என்ன நடைமுறைகள் செய்யப்பட்டன? என்பது குறித்து அவர் அளித்த விளக்கம் இங்கே - "மல்யுத்த வீரர்கள் தங்களின் எடையை விட குறைந்த எடை உள்ள பிரிவுகளிலேயே போட்டியிட விரும்புவார்கள். அதன் மூலம் வலிமை குறைந்த போட்டியாளர்களை சந்தித்து எளிதாக வெற்றி பெறலாம் என அவர்கள் இவ்வாறு செய்வார்கள். அவர்கள் போட்டி நடக்கும் அன்று காலை குறைவான எடை இருக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு அதற்கு முந்தைய நாட்களில் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்படும்."
"அது மட்டும் இன்றி அவர்களுக்கு அதிகமாக வியர்வை வெளியேற வேண்டும். அதற்காக அவர்களுக்கு சானா என்ற வியர்வை வெளியேற்றும் கருவி மற்றும் உடற்பயிற்சிகள் மூலமாக வியர்வை வெளியேற்றப்படும். இதன் மூலமாக குறைக்கப்படும் எடையானது அவர்களை குறைந்த எடை கொண்ட பிரிவுகளில் பங்கேற்க வழிவகுக்கும். எனவே, போட்டிகளுக்கு பின் மல்யுத்த வீரர்கள் குறைந்த அளவு தண்ணீர் மற்றும் அதிக சக்தி அளிக்கும் உணவுகளை உட்கொள்வார்கள். இதை கணக்கிட்டு அளிப்பதற்காகவே ஊட்டச்சத்து நிபுணர் அவருடன் இருப்பார்."
"ஒவ்வொரு வீரருக்கும் என்ன தேவையோ அதை அந்த நிபுணர் கவனிப்பார். வினேஷின் ஊட்டச்சத்து நிபுணர் இது பற்றி கூறுகையில், வினேஷ் இயல்பாக ஒரு நாளைக்கு ஒன்றரை கிலோ அளவுக்கு உணவை உட்கொள்வார். அதன் மூலம் அவர் போட்டிக்கான சக்தியை பெறுவார்" என கூறி இருக்கிறார். சில சமயம் இதை தாண்டியும் போட்டிகளுக்கு பின் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நேற்று வினேஷ் ஒரே நாளில் மூன்று போட்டிகளில் பங்கேற்றார். அதனால், அவருக்கு நீர்ச்சத்து குறைந்து விடாமல் இருக்க சிறிதளவு தண்ணீர் கொடுக்கப்பட்டது. அந்தப் போட்டிகளுக்கு பின்னர் அவரது எடையை பார்த்தபோது இயல்பை விட எடை அதிகரித்து இருந்தது."
"இதை அடுத்து பயிற்சியாளர் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தார். எப்போதும் வினேஷ் எப்படி எடையை குறைப்பாரோ, அந்த முயற்சிகள் செய்யப்பட்டன. இதை அவர் நீண்ட காலமாகவே கடைப்பிடித்து வருகிறார். அதனால், அந்த பயிற்சியாளர் ஒரே இரவில் எடையை குறைத்து விடலாம் என நம்பினார். ஆனால், எங்களின் அனைத்து முயற்சிகளுக்குப் பிறகும் அவரது எடை 100 கிராம் அளவுக்கு அதிகமாக இருந்தது. அதனால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்."
"நாங்கள் ஒரே இரவில் என்ன செய்ய முடியுமோ, அந்த முயற்சிகள் அனைத்தையும் செய்தோம். அவரது முடியை கத்தரித்தோம். உடையின் அளவை குறைத்தோம். நாங்கள் அனைத்தையும் செய்தும் அவரால் 50 கிலோ எடை பிரிவு போட்டியில் பங்கேற்க முடியவில்லை. அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வினேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் இயல்பாக இருக்கிறாரா? என்பதை நாங்கள் பரிசோதித்து வருகிறோம். வினேஷின் எடை குறைப்பு நடைமுறை அனைத்துமே இயல்பாகவே நடந்தன. இவை எப்போதும் நடப்பது தான். அவரும் அப்படித்தான் அதை நினைத்தார்." இவ்வாறு மருத்துவர் தின்ஷா பார்டிவாலா விளக்கம் அளித்திருக்கிறார்.