ஒலிம்பிக் - சிங்கப்பெண் மனு பாக்கர் செய்த மாபெரும் சாதனை.. 2 பதக்கம் வென்ற பிவி சிந்து சாதனை சமன்
பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மனு பாக்கர் இரண்டாவது பதக்கம் வென்று வரலாறு படைத்தார். 10 மீட்டர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து வெண்கலம் வென்றார்.
அதன் மூலம், பாரீஸ் ஒலிம்பிக்கில் தென் கொரியாவை 16-10 என்ற கணக்கில் வீழ்த்தி ஒரே ஒலிம்பிக் போட்டியில் பல பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றார். இதற்கு முன்பு 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலம் வென்று இருந்தார் மனு பாக்கர்.

பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்துவுக்குப் பிறகு இரண்டு பதக்கங்கள் வென்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற மாபெரும் சாதனையை செய்தார். மேலும், ஒரே ஒலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் செய்தார்.
பிவி சிந்து 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் நடந்த வெண்கலப் பதக்கப் போட்டியில் சீனாவின் ஹீ பிங்ஜியாவோவை 21-13, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையை படைத்தார். அதற்கு முன் 2016 ரியோ ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டியில் கரோலினா மரினிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அவருக்கு அடுத்து இந்தியாவுக்காக இரண்டு பதக்கங்கள் வென்ற இரண்டாவது பெண் என்ற சாதனையை செய்து இருக்கிறார் மனு பாக்கர். மேலும், 124 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே ஒலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற சாதனையையும் செய்துள்ளார். மனு பாக்கருடன் இணைந்து முதல் முறையாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங்-குக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்த வெண்கலம் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது பதக்கம் ஆகும். இந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியா வென்ற முதல் இரண்டு பதக்கங்களும் மனு பாக்கர் மூலமாக கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications