Olympics - உலக அரங்கில் அமெரிக்காவை கதறவிட்ட சீனா.. பதக்கப் பட்டியலையே மாற்றக் கோரும் ஊடகங்கள்
பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையேயான பதக்கப் போட்டி உச்சநிலையை எட்டி உள்ளது. தற்போதைய நிலையில் பதக்கப் பட்டியலில் சீனா முதல் இடத்தில் உள்ளது. ஒலிம்பிக் வரலாற்றிலேயே அதிக பதக்கங்களை வென்ற நாடு அமெரிக்கா தான். மேலும், அதிக முறை முதல் இடத்தை பெற்ற நாடும் அமெரிக்கா தான்.
கடந்த சில ஆண்டுகளாக சீனா, அமெரிக்காவை முந்த வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது. எனினும், சீனா இரண்டாவது இடத்தை மட்டுமே பிடித்து வந்தது. இந்த முறை அதிக தங்கப் பதக்கங்களை வென்று இருக்கும் சீனா அமெரிக்காவை முந்துமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கையில் அமெரிக்கா, சீனாவை விட முன்னிலையில் உள்ளது.

ஆனால், பதக்கப் பட்டியலில் அதிக தங்க பதக்கங்கள் வென்ற நாடுகளின் வரிசைப்படி தான் தரவரிசை அமைக்கப்படும் என்பதால் சீனா 39 தங்கப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்தமாக 90 பதக்கங்கள் வென்று முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்கா 38 தங்கப் பதக்கங்களுடன் 122 பதக்கங்கள் வென்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதிக பதக்கங்கள் வென்றபோதும் தங்கப் பதக்கத்தில் அமெரிக்கா பின்னடைவை சந்தித்ததால், தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்க ஊடகங்கள் இந்த தரவரிசை நடைமுறை குறித்து விமர்சனம் செய்து வருகின்றன. ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் இனி புள்ளிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட வேண்டும் என கூறி வருகின்றன.
அதாவது தங்கப் பதக்கத்திற்கு 5 புள்ளிகள், வெள்ளி பதக்கத்துக்கு 3 புள்ளிகள், வெண்கல பதக்கத்துக்கு 1 புள்ளி வழங்க வேண்டும் என அமெரிக்க ஊடகங்கள் கூறி வருகின்றன. அப்படி பார்த்தால் தற்போதையை நிலையில் அமெரிக்கா 358 புள்ளிகளை பெறும். சீனா 300 புள்ளிகளை மட்டுமே பெரும். அதன் அடிப்படையில் அமெரிக்கா முதல் இடத்தை பெறும்.
2024 ஒலிம்பிக் தொடரின் கடைசி நாள் இன்னும் மீதம் இருப்பதால் அதில் அமெரிக்கா அதிக தங்கப் பதக்கங்களை வென்று முதல் இடத்தை தக்க வைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications