2024 ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் - பாகிஸ்தானுக்கு கீழ் சென்ற இந்தியா.. மேலே செல்ல வாய்ப்பு இருக்கா?
பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் பதக்கப் பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றுள்ளது. இன்னும் மூன்று நாட்களில் ஒலிம்பிக் தொடர் முடிவடைய உள்ளது. இந்தியாவுக்கு இன்னும் மிகச் சில போட்டிகளே மீதம் உள்ளன. அவற்றிலும் பதக்கம் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இந்த நிலையில் இதுவரை ஐந்து பதக்கங்கள் வென்ற இந்தியா பதக்கப் பட்டியலில் 64வது இடத்தில் உள்ளது.
அதேசமயம், பாகிஸ்தான் ஒரே ஒரு தங்கப் பதக்கத்தை வென்று ஐந்து பதக்கம் வென்ற இந்தியாவை முந்தி உள்ளது. ஒலிம்பிக் தொடரின் பதக்கப் பட்டியல் தங்கப் பதக்கத்தின் அடிப்படையிலேயே வரிசைப்படுத்தப்படும். அதற்கு அடுத்து வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கல பதக்கங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படும்.

இதுவரை இந்தியா நான்கு வெண்கலப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார். துப்பாக்கி சுடுதலில் இந்தியா மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றது. ஹாக்கியில் மற்றொரு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இதை அடுத்து ஐந்து பதக்கங்களுடன் இந்தியா 64வது இடத்தில் உள்ளது.
அதே சமயம் பாகிஸ்தான் இந்த ஒலிம்பிக் தொடரில் ஒரே ஒரு தங்கப் பதக்கம் மட்டுமே வென்று உள்ளது. வேறு எந்த பதக்கமும் வெல்லவில்லை. ஈட்டி எறிதலில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார். அதன் மூலம் பாகிஸ்தான் பதக்கப் பட்டியலில் 53வது இடத்தில் உள்ளது.
இந்தியா இனி தங்கப் பதக்கம் வென்றால் மட்டுமே பாகிஸ்தானை முந்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவுக்கு கோல்ஃப், ஆண்கள் மற்றும் பெண்கள் 400 மீட்டர் ரிலே ரேஸ், மல்யுத்தத்தில் வெண்கல பதக்கத்துக்கான ஒரு போட்டி மற்றும் மகளிர் மல்யுத்தத்தில் 76 கிலோ எடை பிரிவு போட்டி ஆகியவை மட்டுமே மீதமுள்ளன. இவை எதிலும் இந்தியா தங்கப்பதக்கம் வெல்லும் வென்ற எதிர்பார்ப்பு இல்லை. அந்த வகையில் இந்தியா தற்போது பின்னடைவை சந்தித்து உள்ளது.
தற்போது ஒலிம்பிக் பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 30 தங்கம், 38 வெள்ளி மற்றும் 35 வெண்கலத்துடன் மொத்தம் 103 பதக்கங்கள் வென்று முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் சீனா 29 தங்கம், 25 வெள்ளி மற்றும் 19 வெண்கலம் வென்று உள்ளது. மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா 18 தங்கம், 14 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் வென்றுள்ளது.


Click it and Unblock the Notifications