ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் - உறைந்து போன அமெரிக்கா.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா பின்தங்கி இருக்கிறது. எப்போதும் அமெரிக்கா தான் ஒலிம்பிக் தொடரில் அதிக பதக்கங்கள் வென்ற நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும். குறிப்பாக, அதிக தங்க பதக்கங்கள் வென்ற நாடுகளில் அமெரிக்காவில் முதலிடத்தில் இருக்கும்.
கடந்த 2021 டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் போது சீனா அமெரிக்காவுக்கு நெருக்கமாக வந்தது. அமெரிக்கா 39 தங்கப்பதக்கங்களும், சீனா 38 தங்கப் பதக்கங்களும் வென்று இருந்தன. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இதுவரை நான்கு நாட்கள் முடிந்துள்ள நிலையில், பதக்கப் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் (7 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) இருக்கிறது. இரண்டாவது இடத்தில் சீனா (6 தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கலம்)உள்ளது.

மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா (6 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம்), நான்காவது இடத்தில் ஃபிரான்ஸ் (5 தங்கம், 9 வெள்ளி, 4 வெண்கலம்), ஐந்தாவது இடத்தில் தென்கொரியா (5 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம்), ஆறாவது இடத்தில் அமெரிக்கா (4 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம்) உள்ளன.
அமெரிக்கா இதுவரை இந்த பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 26 பதக்கங்களை வென்று மற்ற நாடுகளை விட அதிக பதக்கங்கள் வென்ற நாடாக இருந்தாலும் ஆறாவது இடத்தில் தான் உள்ளது. தங்கப் பதக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுவதால் அமெரிக்கா 4 தங்கப் பதக்கங்களை மட்டுமே பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை பதக்கப் பட்டியலில் 33 வது இடத்தில் உள்ளது. இந்தியா இதுவரை இரண்டு வெண்கல பதக்கங்கள் மட்டுமே வென்று இருக்கிறது. இந்தியா அடுத்து வெள்ளி பதக்கங்கள் மற்றும் தங்கப் பதக்கங்களை வென்றால் மட்டுமே பதக்கப் பட்டியில் வேகமாக முன்னேற முடியும்.
துப்பாக்கி சுடுதல் போட்டியில் தான் இந்தியாவுக்கு இரண்டு வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் மனு பாக்கர் ஒரு வெண்கல பதக்கத்தை வென்று கொடுத்தார். அடுத்து 10 மீட்டர் கலப்பு அணி பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் இணைந்து மற்றொரு வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்தனர்.


Click it and Unblock the Notifications