ஒலிம்பிக் - நீதான் சிங்கப் பெண்.. உறைய வைத்த இந்திய மல்யுத்த வீராங்கனையின் செயல்.. காயத்தால் தோல்வி
பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த விளையாட்டில் மகளிர் 68 கிலோ கால் இறுதி போட்டியில் இந்தியாவின் நிஷா தஹியா போட்டியிட்டார். அவர் வட கொரியாவின் பாக் சோல் கம் என்ற வீராங்கனைக்கு எதிராக விளையாடினார்.
இந்தப் போட்டியில் அவர் 8 - 1 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் இருந்தார். அப்போது அவரது வலது கையில் பலத்த உள்காயம் ஏற்பட்டது. அவர் வலியால் துடித்தார். இதை அடுத்து மருத்துவ உதவியாளர் அவருக்கு தற்காலிக சிகிச்சை அளித்தார். அதன் பின்னும் நிஷா தஹியாவால் வலியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அதனால் அவர் கலங்கிய நிலையில் அந்தப் போட்டியை தொடர்ந்து பங்கேற்றார். ஆனால், அவரால் கூடுதலாக ஒரு புள்ளியை கூட பெற முடியவில்லை. அவரது வலது கையை அவரால் பயன்படுத்த முடியவில்லை. அதை பயன்படுத்திக் கொண்ட வட கொரிய வீராங்கனை தொடர்ந்து புள்ளிகளை பெற்றதோடு 10 - 8 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார்.
8 - 1 என்ற நிலையிலிருந்து 8 - 10 என்ற நிலையில் நிஷா தஹியா தோல்வி அடைந்தார். அவருக்கு கடுமையான வலி ஏற்பட்ட போதே அவர் இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கலாம். ஆனால், கடைசிவரை நின்று போராட வேண்டும் என்ற விடா முயற்சியோடு அவர் இந்த போட்டியில் பங்கேற்றார்.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த உடன் அவர் உடைந்து அழுதார். அந்த காட்சிகள் காண்போரை உறைய வைப்பதாக இருந்தது. எனினும், இந்திய ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். இந்த போட்டியில் நிஷா தஹியா தோல்வி அடைந்திருந்தாலும் சிங்கப் பெண்ணாக தனது மன உறுதியை நிரூபித்து இருந்தார்.


Click it and Unblock the Notifications