100 வருடம் முன் ஒலிம்பிக் நடத்த முட்டி மோதிய நாடுகள்.. பின்னணியில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
பாரிஸ்: 1896 இல் ஒலிம்பிக் தொடர் முதல் முறையாக கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. அந்த முதல் ஒலிம்பிக் தொடரில் தொடரை நடத்திய கிரீஸ் நாடு மொத்தம் 47 பதக்கங்களை அள்ளியது. மொத்தம் 122 பதக்கங்கள் மட்டுமே அந்த ஒலிம்பிக் தொடரில் அளிக்கப்பட்ட நிலையில், அதில் மூன்றில் ஒரு பங்கை கிரீஸ் நாடு வென்றது.
அதற்கு அடுத்த 1900 இல் ஃபிரான்சில் நடந்த ஒலிம்பிக் தொடரில் மொத்தம் 254 பதக்கங்களில் ஃபிரான்ஸ் மட்டுமே 103 பதக்கங்களை அள்ளியது. இந்த இரண்டு தொடர்களிலும் அமெரிக்கா இரண்டாவது இடத்தை பிடித்தது. அடுத்த மூன்றாவது முறையாக நடந்த ஒலிம்பிக் தொடரை அமெரிக்கா நடத்தியது. 1904 நடைபெற்ற அந்த ஒலிம்பிக் தொடரில் அமெரிக்கா அதிரடியாக மொத்தம் உள்ள 280 பதக்கங்களில் 231 பதக்கங்களை வென்று வரலாறு படைத்தது. இன்று வரை எந்த நாடும் இத்தனை பதக்கங்கள் வென்றதில்லை.

இந்த மூன்று ஒலிம்பிக் தொடர்களை ஒப்பிட்டு பார்த்தால் ஒரு உண்மை புரிய வரும். துவக்க காலத்தில் எந்த நாடு ஒலிம்பிக் தொடரை நடத்தியதோ, அந்த நாடு அதிக ஒலிம்பிக் பதக்கங்களை வென்று இருந்தது. நூறாண்டுகளுக்கு முந்தைய நிலை இப்படித்தான் இருந்தது. ஏனெனில், அப்போது மொத்தமே 10 முதல் 20 நாடுகள் மட்டுமே ஒலிம்பிக்கில் பங்கேற்று வந்தன. எந்த நாடு ஒலிம்பிக் தொடரை நடத்துகிறதோ அந்த நாடு அதிக அளவில் விளையாட்டு வீரர்களை போட்டிகளில் பங்கேற்க வைக்கும்.
அப்போது ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டில் இருந்து ஒலிம்பிக் தொடர் நடக்கும் நாட்டிற்கு வீரர்களை செலவு செய்து அனுப்பி வைப்பது என்பது கடினமான சூழ்நிலையாக இருந்தது. இப்போது போல இப்போது விமான சேவை இருக்கவில்லை. கப்பலில் தான் வீரர்களை அனுப்ப வேண்டும். அதனால், மற்ற நாடுகள் மிக குறைந்த அளவிலேயே வீரர்களை அனுப்பும்.
அதே சமயம் தொடரை நடத்தும் நாடு அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மொத்த வீரர்கள் எண்ணிக்கையில் 70 சதவீதம் அளவுக்கு தங்கள் நாட்டு வீரர்களை பங்கேற்க வைத்து பதக்கங்களை அள்ளும். இதே நிலை நீண்ட காலத்துக்கு நீடித்தது. அடுத்து நடந்த 1908 கிரேட் பிரிட்டன் ஒலிம்பிக் தொடரில் அந்த நாடு 146 பதக்கங்களை வென்றது. அதற்கு முந்தைய ஒலிம்பிக்கில் அமெரிக்கா 231 பதக்கங்களை வென்றிருந்த நிலையில் இந்த முறை அமெரிக்கா 47 பதக்கங்கள் மட்டுமே வென்றது.
அதே போல அடுத்து ஸ்வீடன் நாட்டில் 1912 ஒலிம்பிக் தொடர் நடைபெற்றது. அந்த நாடு அப்போது 65 பதக்கங்களை வென்றது. அமெரிக்க 64 பதக்கங்களை வென்று இருந்தது. அடுத்து 1920 இல் ஒலிம்பிக் தொடர் பெல்ஜியம் நாட்டில் நடைபெற்றது. அந்த நாடு அதற்கு முன்பு பத்தாவது இடத்திற்கு மேல் வந்ததே இல்லை. ஆனால், இந்த முறை அந்த நாடு ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. ஆனால், அப்போது அமெரிக்கா 95 பதக்கங்களை வென்றிருந்தது.
இப்படி எந்த நாடு தொடரை நடத்துகிறதோ அந்த நாடு அதிக பதக்கங்களை வெல்லலாம் என்பதால் ஒவ்வொரு நாடும் ஒலிம்பிக் தொடரை நடத்த முட்டி மோதின. தாங்கள் வளர்ந்த நாடு என மற்ற நாடுகளுக்கு முன்பு காட்டிக் கொள்வதற்காக இவ்வாறு செய்தன. ஆனால், துவக்கத்தில் இருந்தே அமெரிக்கா ஒலிம்பிக் தொடரில் ஆதிக்கம் செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications