பாரிஸ்: முன்னாள் பேட்மிண்டன் வீரரும், பயிற்சியாளருமான பிரகாஷ் படுகோனே, இந்திய பேட்மிண்டன் வீரர்கள் 2024 ஒலிம்பிக் தொடரில் ஒரு பதக்கம் கூட வெல்லாததை அடுத்து அவர்களை கடுமையாக விளாசி இருக்கிறார். அமெரிக்கா கூட செய்து தராத வசதிகளை இந்திய அரசும், இந்திய விளையாட்டு அமைப்புகளும் வீரர்களுக்கு செய்து கொடுத்து இருப்பாதாகவும், ஆனாலும் அவர்களால் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியவில்லை எனவும் அவர் கடுமையாக பேசி இருக்கிறார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஐந்து பேட்மிண்டன் விளையாட்டுகளில் ஏழு இந்திய பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அந்த ஐந்து விளையாட்டில் ஒரு பதக்கமாவது இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அதிகபட்சமாக ஆடவர் ஒற்றையர் பிரிவில் லட்சயா சென் நான்காவது இடத்தை மட்டுமே பிடித்தார்.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அவர் மலேசிய வீரரிடம் தோல்வி அடைந்திருந்தார். முன்னதாக பிவி சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவிலும், ஹெச் எஸ் பிரணாய் ஆடவர் ஒற்றையார் பிரிவிலும், சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி ஆடவர் இரட்டையர் பிரிவிலும். தனிஷா கிராஸ்டோ - அஸ்வினி பொன்னப்பா ஜோடி மகளிர் இரட்டையர் பிரிவிலும் தோல்வி அடைந்திருந்தனர்.

இவர்களில் லட்சயா சென் மட்டுமே அரை இறுதி சுற்று வரை முன்னேறி இருந்தார். இந்த நிலையில் பேட்மிண்டன் வீரர்களின் மோசமான செயல்பாடுகளை சுட்டிக்காட்டி முன்னாள் பேட்மிண்டன் வீரரும், பயிற்சியாளருமான பிரகாஷ் படுகோனே கடுமையாக விளாசி இருக்கிறார்.
இவர் லட்சயா சென்னுக்கு அதிக ஆதரவளித்து, ஆரம்பம் முதலே பயிற்சி மற்றும் நிதி ரீதியான உதவிகள் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அவர் பேசுகையில், "1964 இல் மில்கா சிங், பின்னர் 1980 களில் பிடி உஷா ஆகியோர் நான்காவது இடத்தை பிடித்து பதக்கத்தை தவறவிட்டிருந்தனர். அதன் பின்பு இந்த முறை பல வீரர்கள் நான்காவது இடத்தை மட்டுமே பிடித்து தோல்வியடைந்து இருக்கிறார்கள். இப்போது வீரர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்." என்றார்.
மேலும், "இந்த ஒலிம்பிக் தொடர் மற்றும் இதற்கு முந்தைய ஒலிம்பிக் தொடர்களில் விளையாட்டு அமைப்புகள் மற்றும் அரசை நாம் எந்த வகையிலும் குறை சொல்ல முடியாது. அவர்கள் இந்த மோசமான முடிவுகளுக்கு காரணம் அல்ல. வீரர்களே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். விளையாட்டு அமைப்புகளும், அரசாங்கமும் என்ன தேவையோ அவை அனைத்தையும் அளித்து உள்ளன. இப்போது வீரர்கள் மீதுதான் அனைத்து பொறுப்பும் உள்ளது. எப்போது தேவையோ அப்போது அவர்கள் வெற்றி பெற்று கொடுக்க வேண்டும்." என்றார்.
மேலும், "இனியும் வீரர்கள் விளையாட்டு அமைப்புகளிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கக் கூடாது. ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பட்ட பிசியோதெரபிஸ்ட் அளிக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் பல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் வீரர்கள், "வெற்றிக்காக நாம் கடுமையாக உழைக்கிறோமா?" என்ற கேள்வியை கேட்க வேண்டும். அமெரிக்கா உட்பட எந்த நாடும் வீரர்களுக்கு இத்தகைய வசதிகளை செய்து கொடுக்கவில்லை." என்றார் பிரகாஷ் படுகோனே.
மேலும், "நானும், விமலும் (லட்சயா சென்-இன் பயிற்சியாளர்) லட்சயா சென் நான்காவது இடம் பெற்றதில் மகிழ்ச்சி அடையவில்லை. அவர் நிச்சயம் பதக்கம் வென்று இருக்க முடியும். விக்டர் ஆக்சல்சென், லட்சயா சென் தான் அடுத்த சிறந்த பேட்மிண்டன் வீரர் என்று சொல்லலாம். ஆனால், அவர் சிறந்த செயல்பாட்டை அளிக்கவில்லை. ஏனெனில், அவர் பதக்கத்தை தவற விட்டு இருக்கிறார்" என்றார் பிரகாஷ் படுகோனே. இந்திய பேட்மிண்டனின் மதிப்புக்குரியவரான பிரகாஷ் படுகோனேவின் கடுமையான வார்த்தைகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.