மும்பை: சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தன்னுடன் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா பேட்மிண்டன் விளையாடினால், தான் அடிக்கும் ஸ்மாஷ்-ஐ அவரால் எதிர்கொள்ள முடியாது என கூறி இருக்கிறார். இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு சாய்னா நேவால் இந்திய கிரிக்கெட் வீரர்களை விட பேட்மிண்டன், டென்னிஸ் மற்றும் கூடைப்பந்து வீரர்கள் உடல் அளவில் வலிமையானவர்கள் என கூறி இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ரகுவன்ஷி அவரை கிண்டல் செய்யும் வகையில், "சாய்னா நேவால் பும்ராவின் 150 கிலோமீட்டர் பந்தை எதிர்கொள்வதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்" என பதிவிட்டு இருந்தார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் அது குறித்து பேசி இருந்தார் சாய்னா நேவால். "கிரிக்கெட்டில் எல்லாரும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவாக ஆகிவிடுகிறார்களா? அப்படி இல்லை. சிலர் மட்டுமே அந்த இடத்தை அடைகிறார்கள். கிரிக்கெட் ஒரு திறன் சார்ந்த விளையாட்டு என நான் கருதுகிறேன். பந்துவீச்சாளர்கள் வேண்டுமானால் வலிமையாக இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், நான் கிரிக்கெட் விளையாடினால் களத்தில் இறந்து விட மாட்டேன். நான் எதற்காக பும்ராவை சந்திக்க வேண்டும்? நான் எட்டு ஆண்டுகளாக பேட்மிண்டன் விளையாடுகிறேன். நான் நிச்சயமாக பும்ராவின் பந்துவீச்சை நன்றாக எதிர்கொள்வேன்." என்றார்.
மேலும், "பும்ரா பேட்மிண்டன் விளையாடினால் அவர் எனது ஸ்மாஷ்-ஐ சந்திக்க முடியாது. நாம் நமது நாட்டுக்குள்ளே இப்படி சண்டையிட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அதை தான் நான் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு விளையாட்டுக்கும் இங்கே இடம் உள்ளது. ஆனால், நீங்கள் மற்ற விளையாட்டுக்கும் மதிப்பு கொடுங்கள் என்று தான் நான் கூறுகிறேன். எப்போதும் நாம் கிரிக்கெட் மற்றும் பாலிவுட் மீது தான் கவனம் செலுத்துகிறோம்." என்று கூறினார் சாய்னா நேவால். அவர் கூறுவதில் ஒரு காரணம் இருந்தாலும், அவர் தேவையில்லாமல் கிரிக்கெட் வீரர்கள் குறித்து பேசி வருவதாக கிரிக்கெட் ரசிகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.