அமெரிக்காவை அலறவிட்ட "பிளாக் சல்யூட்".. ஒலிம்பிக் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவம்
பாரிஸ்: ஒலிம்பிக் வரலாற்றில் மறக்க முடியாத சில நிகழ்வுகளில் முக்கியமானது 1968 ஒலிம்பிக் தொடரில் நடைபெற்ற "கருப்பு வணக்கம்" (The Black Salute) என்ற நிகழ்வு ஆகும். 1968 ஒலிம்பிக் தொடர் மெக்ஸிகோ நாட்டில் நடைபெற்றது. அந்த ஒலிம்பிக் தொடரில் அமெரிக்காவின் ஓட்டப்பந்தய வீரர்கள் டாம்மி ஸ்மித் மற்றும் ஜான் கார்லோஸ் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றனர்.
வெற்றிக்கு பின் அவர்கள் மேடையில் ஏறி பதக்கத்தை பெற்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் போது அமெரிக்க ஆப்பிரிக்கர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சத்தமே இல்லாமல் செய்த கருப்பு வணக்கம் மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர். அப்போதும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் டாம்மி ஸ்மித் தங்கப் பதக்கத்தையும், கார்லோஸ் வெண்கல பதக்கத்தையும் வென்று இருந்தனர்.

அதே 1968ஆம் ஆண்டில் ஒலிம்பிக் தொடருக்கு சில மாதங்கள் முன்னதாக அமெரிக்க ஆப்பிரிக்கர்களுக்காக குரல் கொடுத்து மிகப்பெரிய போராட்டங்களை வழிநடத்தி வந்த மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அமெரிக்காவில் கொல்லப்பட்டார். அதனால், அமெரிக்க ஆப்பிரிக்கர்கள் கொதித்துப் போயிருந்தனர்.
இந்த நிலையில் தான், 1968 ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஸ்மித் மற்றும் வெண்கலம் வென்ற கார்லோஸ் தங்களின் கால்களில் ஷூ அணியாமல் கருப்பு நிற சாக்ஸ் மட்டும் அணிந்து கொண்டு கைகளில் கருப்பு நிற உறை அணிந்து கொண்டு, ஒரு கையில் கருப்பு நிற துணி ஒன்றை வைத்துக்கொண்டு இருந்தனர். சரியாக பதக்கங்கள் அணிவித்த பின், அமெரிக்க தேசிய கீதம் ஒலிக்கப்பட்டபோது ஸ்மித் மற்றும் கார்லோஸ் தங்கள் வலது கையை மேலே உயர்த்தி முஷ்டியை மடக்கி தலையை கீழே குனிந்து நின்று இருந்தனர். அவர்கள் குறியீட்டின் மூலம் கருப்பு இன மக்களுக்கு ஆதரவாக செய்த அந்த சைகை கருப்பு வணக்கம் என அழைக்கப்பட்டது.
அதன் மூலம் அமெரிக்க ஆப்பிரிக்கர்கள் மிக மோசமான நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டி, கருப்பு இன போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர்கள் இதை செய்தனர். இதை அடுத்து ஸ்மித் மற்றும் கார்லோஸ் அந்த ஒலிம்பிக் தொடரில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். அந்த சம்பவம் அப்போது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. பின்னர் உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரராக இருந்த ஸ்மித் எந்த விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்க முடியாத நிலையில் பள்ளி குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து தனது தினசரி வாழ்வை நடத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார். எனினும், அவர் தொடர்ந்து கருப்பின மக்களுக்காக குரல் கொடுத்து வந்தார். 2008 ஆம் ஆண்டு பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது, டாம்மி ஸ்மித் மற்றும் கார்லோஸுக்கு விருது வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications