வினேஷ் போகட் - சோம்வீர்.. ரயில்வேயில் மலர்ந்த காதல்.. விமான நிலையத்தில் முடிவான திருமணம்
டெல்லி: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் வினேஷ் போகட்டிற்கு ஏற்பட்ட துயரமான சம்பவம் இந்தியர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவர் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டிக்கு முன் 100 கிராம் கூடுதல் எடை இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அதன் முடிவில் அவர் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வையும் அறிவித்தார். இந்த சூழ்நிலையில், அவருக்கு ஆறுதலாக இருப்பது அவரது கணவர் சோம்வீர் ரத்தியும் ஒருவர். பலருக்கும் வினேஷ் போகட் திருமணமானவர் என்ற தகவல் தெரியாது. ஆனால், அவரது போராட்ட வாழ்வில் நடந்த நல்ல விஷயங்களில் அவரது காதல் திருமணமும் ஒன்று.

வினேஷ் மற்றும் சோம்வீர் ஆகிய இருவரும் மல்யுத்த வீரர்கள் தான். இருவரும் ரயில்வே துறையில் ஒன்றாக வேலை பார்த்தபோது ஒருவரை ஒருவர் சந்தித்து, புரிந்து கொண்டு காதலிக்கத் தொடங்கினர். அவர்கள் காதல் எப்படி திருமணத்தில் முடிந்தது என்பது சுவாரசியமான ஒன்று.
வினேஷ் போகட் தேசிய அளவிலான மல்யுத்த வீராங்கனையாக ஆனதை அடுத்து இந்திய ரயில்வேயில் அவருக்கு பணி கிடைத்தது. அதே சமயம் தேசிய அளவில் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று வந்த ஹரியானவின் சோம்வீர் ரத்தியும் ரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற்றார். இவர்கள் இருவரும் ரயில்வேயில் பணி புரியும் போது மல்யுத்த வீரர்கள் என்ற அடிப்படையில் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர்.
பின்னர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இருவரும் காதலிக்கத் தொடங்கினர். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வினேஷ் தங்கப் பதக்கம் வென்றார். அவர் வெற்றி வாகை சூடிய பின் இந்தியாவுக்கு திரும்பிய போது விமான நிலையத்திலேயே வைத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார் சோம்வீர் ரத்தி.
இருவரது குடும்பத்தினர் முன்னிலையில் அவர் விமான நிலைய வாயிலில் தனது திருமண ஆசையை வெளிப்படுத்தி திகைக்க வைத்தார். அதை பார்த்து மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனார் வினேஷ் போகட். பின்னர் இருவரும் அதே ஆண்டு மிக எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். தங்களின் திருமணத்திற்காக அதிக பணத்தை செலவழிக்கக் கூடாது என்பதில் இருவரும் உறுதியாக இருந்தனர்.
இருவரது குடும்பத்தினர் மட்டும் சூழ மிக எளிமையாக அவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது அவர்களது குடும்ப நம்பிக்கையின்படி ஏழு உறுதிமொழிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், அப்போது இவர்கள் இருவரும் எட்டாவது உறுதி மொழியாக ஒன்றை சேர்த்துக் கொண்டனர். அந்த எட்டாவது உறுதி மொழி - "மகள்களை காப்பாற்ற வேண்டும். அவர்களை படிக்க வைக்க வேண்டும். அவர்களை விளையாட்டில் முன்னுக்கு கொண்டு வர வேண்டும்." என்பதாகும்.


Click it and Unblock the Notifications