Vinesh Phogat - "தண்ணீரில் எதையாவது கலந்து.. சிக்க வைக்க சதி நடக்கலாம்".. வேகமாக பரவும் பழைய ட்வீட்
டெல்லி: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிர் 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்த விளையாட்டின் இறுதிப் போட்டியில் இருந்து வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தனக்கு எதிராக சதி நடக்கலாம் என கடந்த ஏப்ரல் மாதம் அவர் வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
2024 ஒலிம்பிக் தொடரில் 50 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்க இருந்த வினேஷ் போகட் 50 கிலோவுக்கும் குறைவான எடை இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர் 50 கிலோ 100 கிராம் எடை இருந்ததால் கூடுதல் எடையை சுட்டிக் காட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை அடுத்து சென்ற ஆண்டு இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக அவர் போராட்டம் நடத்தியதால் அவருக்கு எதிராக வேண்டுமென்றே யாரேனும் அவர் எடையை கூட்ட முயற்சித்தார்களா? அதிக உணவை அளித்தார்களா? என்ற சந்தேகங்கள் பொது மக்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், வினேஷ் போகட் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் தனக்கு எதிராக சதி நடக்கலாம் என கூறி இருக்கும் பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது. அந்த பதிவு இதுதான் -
"ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டி ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த ஒரு மாதமாக, எனது பயிற்சியாளர் மற்றும் பிசியோவின் அங்கீகாரம் கோரி இந்திய அரசிடம் (SAI, TOPS) கோரிக்கை விடுத்து வருகிறேன். அங்கீகாரம் இல்லாமல், எனது பயிற்சியாளரும், பிசியோவும் என்னுடன் போட்டி அரங்கிற்கு வர முடியாது. ஆனால் பலமுறை கோரிக்கை விடுத்தும், எங்கிருந்தும் எனக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. எனக்கு உதவி செய்ய யாரும் தயாராக இல்லை. வீரர்களின் எதிர்காலம் எப்போதும் இப்படித்தான் கையாளப்படுமா? என்னை ஒலிம்பிக்கில் விளையாடவிடாமல் தடுக்க பிரிஜ் பூஷனும் அவருடன் இருக்கும் சஞ்சய் சிங்கும் எல்லா வகையிலும் முயற்சி செய்து வருகின்றனர்."
"அணியுடன் நியமிக்கப்பட்டுள்ள அனைத்து பயிற்சியாளர்களும் பிரிஜ் பூஷனுக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் பிடித்தமானவர்கள். ஆதலால், எனது போட்டியின் போது எனது தண்ணீரில் எதையாவது கலந்து குடிக்க வைத்து விடுவார்கள் என்பதை மறுக்க முடியாது. என்னை ஊக்கமருந்து வழக்கில் சிக்க வைக்க சதி நடக்கலாம் என்று சொன்னால் அது தவறில்லை. எங்களை மனரீதியாகத் துன்புறுத்த அவர்கள் எந்த வாய்ப்பையும் விட்டு வைக்கவில்லை. இவ்வளவு முக்கியமான போட்டிக்கு முன் எங்களை இப்படி சித்திரவதை செய்வது எந்த அளவுக்கு நியாயம்? பாலியல் வன்கொடுமைக்கு எதிராக குரல் எழுப்பியதால் நாட்டுக்காக விளையாடச் செல்லும் முன்பே அரசியலை எதிர்கொள்வோமா? நம் நாட்டில் தவறுக்கு எதிராக குரல் எழுப்பியதற்கு இதுதான் தண்டனையா?" இவ்வாறு இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக தான் போராடியதால் தனக்கு எதிராக சதி நடக்கலாம் என அவர் கூறி இருந்தார்.


Click it and Unblock the Notifications