"உங்கள் தியாகமே காரணம்".. பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் குடும்பத்தாருடன் பிரதமர் உரையாடல்
டெல்லி: பாரா ஒலிம்பிக் தொடர் 2021, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பாரா ஒலிம்பிக் இந்திய அணியின் கேப்டனாக மாரியப்பன் தங்கவேலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாரா ஒலிம்பிக் இந்திய அணியின் வீரர்கள் அணி வகுப்பின் போது தேசியக்கொடியை மாரியப்பன் தங்கவேலு ஏந்திச் செல்லவிருக்கிறார்.

இந்தியாவிற்கு பெருமை
ஒலிம்பிக் தொடரில் இந்திய கொடியை ஏந்தப் போகும் முதல் தமிழக வீரர் எனும் கௌரவத்தை, பெருமையை மாரியப்பன் பெறவுள்ளார். இதற்கிடையில், பாரா ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் குழுவுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவின் தாயாருடன் பேசிய பிரதமர் மோடி, "உங்கள் தியாகத்தால் மட்டுமே மகனால் சாதிக்க முடிந்தது" என உருக்கமாக கூறினார். அப்போது பேசிய மாரியப்பன் தங்கவேலுவின் தாயார், " எங்கள் மகன் பதக்கம் வாங்கவேண்டுமென இறைவனை வேண்டுவதாக" கூறினார். மாரியப்பன் தங்கவேலுவின் சகோதரர் பேசும் போது, "எனது சகோதரன் ஊருக்கும், மாநிலத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளதாக" குறிப்பிட்டார்.

கோல்டு மெடலிஸ்ட்
2016ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் தங்கவேலு, 1.8 மீட்டர் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தியிருந்தார். சேலம் மாவட்டம் பெரியவடகம் பட்டியில் மாரியப்பன் தங்கவேலு பிறந்தார். ஐந்து வயதில் மாரியப்பன் பள்ளிக்கு நடந்து சென்றபோது, எதிர்பாராமல் நடந்த பேருந்து விபத்து ஒன்றில், மாரியப்பனின் ஒரு கால் ஊனமானது. பள்ளிப் பருவத்தில் மாரியப்பனை ஊக்கப்படுத்திய உடற்பயிற்சி ஆசிரியர் அவருக்கு உயரம் தாண்டும் பயிற்சி வழங்கினார். 14 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் பங்கேற்கும் உயரம் தாண்டுதல் போட்டியில், மாரியப்பன் இரண்டாம் இடம் பிடித்து அனைவரையும் வியக்க வைத்தார்.

1.89 மீட்டர்
பிறகு, கடந்த 2013ல் ஊனமுற்றோருக்கான தேசிய விளையாட்டு அகாடமியில் இணைந்த மாரியப்பன், இந்திய அளவில் நடைபெற்ற தேசிய ஊனமுற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டார். 2015ஆம் ஆண்டு முதல் பெங்களூருவில் இவருக்குத் தனியாகப் பயிற்சிகள் வழங்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் துனிசியா நாட்டில் உலக அளவில் நடைபெற்ற ஊனமுற்றோர்களுக்கான உயரம் தாண்டும் போட்டியில் 1.78 மீட்டர் தாண்டி பாரா ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார். பிறகு, 2019ல் ஜெனிரோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில் 1.89 மீட்டர் தாண்டி தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்தார்.

அர்ஜூனா விருது
2017ஆம் ஆண்டு மாரியப்பன் தங்கவேலுவிற்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது. அதே ஆண்டில், அர்ஜூனா விருதும் வழங்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் 2 கோடி ரூபாயும், மத்திய அரசு சார்பில் 30 லட்ச ரூபாயும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 15 லட்சம் ரூபாய் வழங்கி மாரியப்பனை ஊக்கப்படுத்தினார். விபத்தால் ஒரு நொடியில் தன் வாழ்க்கை மாறினாலும், அந்த பின்னடைவையே தனக்கு சாதகமாக பயன்படுத்தி,ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று, இன்று இந்திய நாட்டின் பிரதமர் அவரது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு பேசும் அளவுக்கு வளர்த்திருக்கிறார் என்றால், மாரியப்பன் நிச்சயம் நம் ஒவ்வொருவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டு தான்.
இந்த ஒலிம்பிக்கிலும் மெடல் அடிச்சிட்டு வாங்க மாரியப்பன்!


Click it and Unblock the Notifications