சென்னை: உலக செஸ் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை திணற வைத்த பிரக்ஞானந்தாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் கேமராக்கள் சூழ பிரம்மாண்டமாக அளிக்கப்பட்ட வரவேற்பு ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
செஸ் உலகக்கோப்பைத் தொடரில் 18 வயதேயான தமிழக வீரர் பிரக்ஞானந்தா இறுதிப்போட்டி வரை முன்னேறி சாதனை படைத்தார். இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனையே திணறி வைத்துவிட்டார் பிரக்ஞானந்தா. கடைசியாக டை பிரேக்கர் சுற்றில் தான் மேக்னஸ் கார்ல்சனால் வெல்ல முடிந்தது.

உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது இடம் பிடித்தாலும் உலகமே பிரக்ஞானந்தாவின் ஆட்டத்தை பார்த்து மிரண்டுபோனது. 18 வயது சிறுவனால் எப்படி இவ்வளவு தூரம் வர முடிந்தது என்று சமூக வலைதளங்களில் பலரும் வியப்பை வெளிப்படுத்தி வந்தனர். வேங்கை வாழ்ந்த காட்டினில் வேங்கை வந்து நிரப்புவது போல், விஸ்வநாதன் ஆனந்த் இடத்தை நிரப்ப அதே தமிழ்நாட்டில் இருந்து பிரக்ஞானந்தா வந்துவிட்டார் என்று மக்கள் கொண்டாட தொடங்கினார்கள்.
ஆனால் பிரக்ஞானந்தா பாராட்டுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நேராக ஜெர்மனி சென்று ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றார். அது நேற்று முடிவடைந்த நிலையில், இன்று சென்னை திரும்பினார் பிரக்ஞானந்தா. அவருக்கு தமிழக அரசு சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், சென்னையின் அத்தனை கேமராக்களும் கடல் போல் பிரக்ஞானந்தாவை சூழ்ந்தது.

அந்த கடலில் இருந்து வெளிவந்த பிரக்ஞானந்தா, ஒரு வழியாக காரில் ஏறி அனைவருக்கும் கைகளை அசைத்தவாறு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். கிரிக்கெட்டை கொண்டாடிய தமிழ்நாட்டில், செஸ் வீரருக்கு இப்படி ஒரு வரவேற்பா என்று ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இன்னும் சிலர் அடிமட்டத்தில் இருந்து உச்சத்திற்கு சென்று போராடிய வீரருக்கு சரியான மரியாதை அளிக்கப்பட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுபோல் இரு ஆண்டுகளுக்கு முன் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் சிட்னில் இருந்து சேலம் திரும்பிய போது பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த இரு சம்பவங்களையும் ஒப்பிட்டு தாங்களே வென்றது போல் உணர்வு ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் நெகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.