சென்னை : பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து வரும் டிசம்பர் 22ஆம் தேதி ஹைதராபாத்தைச் சேர்ந்த வெங்கட சாய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்ய இருக்கிறார். 29 வயதான பிவி சிந்து ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம், காமன்வெல்த், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் என பல்வேறு தொடர்களில் சாதித்து இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது தனது வாழ்க்கையில் அடுத்த அத்தியாயத்திற்கு செல்கிறார். இந்த நிலையில் பி வி சிந்துவுக்கும் நடிகரும் தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் குடும்பத்திற்கும் இருந்த நட்பு குறித்து தற்போது பார்க்கலாம்.

பிவி சிந்து ரியோ ஒலிம்பிக்கில் சாதிப்பதற்கு முன்பே அவருக்கும் சென்னைக்கும் ஒரு உறவு இருந்தது. அதற்கு காரணம் நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகர் தான். ஐபிஎல் பாணியில் பேட்மிண்டனை மையமாக வைத்து இந்திய பேட்மிண்டன் என்ற தொடர் நடைபெற்றது.
இதில் சென்னை ஸ்மாசஸர் அணியின் உரிமையாளரான விஜய பிரபாகர் ஏலத்தில் பிவி சிந்துவை ரூபாய் 39 லட்சத்திற்கு வாங்கினார். அதற்கு முன்பே பிவி சிந்துவின் ஒரு ஸ்பான்சர் ஆக விஜய பிரபாகர் இருந்திருக்கிறார். இந்த நிகழ்வுக்கு பிறகு பிவி சிந்துவுக்கும் விஜயகாந்த் குடும்பத்திற்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டிருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் நானும் ரவுடிதான் படத்தில் என்ன ஒரு ரவுடி கிட்ட கூட்டிட்டு போக முடியுமா என நயன்தாரா கேட்கும் வசனத்தை பிவி சிந்துவும் விஜய பிரபாகரும் இணைந்து டப்ஸ்மாஷ் செய்திருந்தார்கள். சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் விஜயகாந்த் குடும்பத்தினருடன் பிவி சிந்துவும் பங்கேற்று இருந்தார்.
இதனால் பிவி சிந்துவும் விஜயகாந்தின் மகனும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என அப்போதே செய்திகள் வலம் வந்தது.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன், நானும் பிவி சிந்துவும் நல்ல நண்பர்கள்தான் என்று கூறி இருந்தார். நாளடைவில் இவர்களின் நட்பு என்ன ஆனது என தெரியவில்லை. இந்த சூழலில் பிவி சிந்து ஐதராபாத்தைச் சேர்ந்த வெங்கட சாய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்ய உள்ள நிலையில், பி வி சிந்து தமிழ்நாட்டுக்கு மருமகளாக வருவார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.