
200வது டெஸ்ட் கண்ட சச்சின்
கிரிக்கெட் ரசிகர்களால் கடவுள் என போற்றப்பட்ட சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளைப் பூர்த்தி செய்து புதிய சாதனை படைத்தார். இது உலகளவில் மிகப் பெரிய சாதனை.

விராத் கோஹ்லியின் அதி வேக ரன் குவிப்பு
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதி வேகமாக 5000 ரன்களைக் குவித்த விவியன் ரிச்சர்ட்ஸின் சாதனையை முறியடித்தார் இந்தியாவின் விராத் கோஹ்லி. தனது 114வது ஒரு நாள் போட்டியில் இந்த சாதனையைப் படைத்தார்... கொச்சியில்.

இன்னொரு ரிச்சர்ட்ஸ் சாதனையும் முறியடிப்பு
அதேபோல ஒரு நாள் போட்டிகளில் அதி வேகமாக 4000 ரன்களைக் குவித்த ரிச்சர்ட்ஸின் இன்னொரு சாதனையை, தென் ஆப்பிரிக்க வீரர் ஹஷீம் அம்லா முறியடித்தார். டர்பனில் இந்தியாவுக்கு எதிராக நடந்த 2வது ஒரு நாள் போட்டியின்போது இந்த சாதனையை அவர் படைத்தார். தனது 81வது ஒரு நாள் போட்டியில் இதை அவர் நிகழ்த்தினார். இதே சாதனையை ரிச்சர்ஸ்ட் தனது 88வது ஒரு நாள் போட்டியில் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2வது ஒரு நாள் இரட்டை சதம்.. ரோஹித் சாதனை
பெங்களூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நவம்பர் 2ம் தேதி நடந்த ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் ரோஹித் சர்மா புயல் வேகத்தில் ஆடி 209 ரன்களைக் குவித்தார். ஒரு நாள் போட்டியில் எடுக்கப்பட்ட 2வது அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் இது. இதற்கு முன்பு வீரேந்திர ஷேவாக் 219 ரன்களைக் குவித்து தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.

சிக்ஸ் மழையில் ரோஹித் சர்மா சாதனை
இதே போட்டியில், ஒரு நாள் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த ஆஸ்திரேலியாவின் ஷான் வாட்சன் சாதனையை இந்தியாவின் ரோஹித் சர்மா, அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முறியடித்தார். ஷான் வாட்சன் 2011ல் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின்போது 15 சிக்ஸர்களை விளாசியிருந்தார். இதை ரோஹித் சர்மா 16 சிக்ஸர்களை அடித்து முறியடித்தார்.

இலக்கணத்தை மாற்றியமைத்த கெய்ல்
புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின்போது, அதி வேகமாக சதம் போட்டு அத்தனை பேரையும் பயமுறுத்தினார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கிறிஸ் கெய்ல். 30 பந்துகளில் 100 ரன்களைக் குவித்த கெய்ல், 66 பந்துகளில் 175 ரன்களைக் குவித்தார். 20 ஓவர்களில் பெங்களூர் அணி 263 ரன்களைக் குவித்து விட்டது. கெய்ல், 17 சிக்ஸர்களையும், 13 பவுண்டரிகளையும் விளாசினார்.

அதிக விக்கெட்களை வீழ்த்தி அமீத் மிஸ்ரா சாதனை
இரு தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரில் அதிக விக்கெட்கள் வீழத்தி ஏற்கனவே உள்ள உலக சாதனையை சமன் செய்தார் அமித் மிஸ்ரா. ஜிம்பாப்வேக்கு எதிராக நடந்த ஒரு நாள் தொடரின்போது அவர் 18 விக்கெட்களைச் சாய்த்தார். ஏற்கனவே 2002-03ல் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஸ்ரீநாத் சாய்த்த 18 விக்கெட்களே இதுவரை சாதனையாக இருந்தது. அதை சமப்படுத்தி விட்டார் மிஸ்ரா.

செளதாம்ப்ட்டனில் சாதனை மழை
செளதாம்ப்ட்டனில் நடந்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான டுவென்டி 20 தொடரில் பல சாதனைகள் படைக்கப்பட்டன. இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 457 ரன்களைக் குவித்தது ஒரு சாதனை. அதில் 310 ரன்கள் , சிக்ஸர்கள், பவுண்டரிகள் மூலம் வந்தது 2வது சாதனை.

அதிக அளவிலான சிக்ஸர்கள்
இப்போட்டியில், ஆஸ்திரேலியா அணி மொத்தம் 18 சிக்ஸர்களை விளாசியது. இது ஒரு புதிய சாதனை.

கோஹ்லியின் படுவேக செஞ்சுரி சாதனை
112 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 17 சதங்களையும், 4919 ரன்களையும் குவித்து கங்குலியை முந்தினார் விராத் கோஹ்லி. ஆனால் ரசிகர்களால் போற்றப்படும் சச்சின், தனது 4000 ரன்களைக் கடந்தபோது 8 சதங்களை மட்டுமே அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஐந்து அரை சதம்... கோஹ்லியின் இன்னொரு சாதனை
அதேபோல இரு வேறு தொடர்களில், தொடர்ந்து ஐந்து போட்டிகளில் அரை சதம் அல்லது 50க்கு மேல் அடித்து புதிய சாதனை படைத்தார் கோஹ்லி. 2012ம் ஆண்டு பிப்ரவரி 28 முதல் ஜூலை 21 வரையிலான காலகட்டத்தில் நான்கு சதங்களையும், ஒரு போட்டியில் 66 ரன்னையும் எடுத்திருந்தார் கோஹ்லி. அதேபோல 2013, ஜூலை 28 முதல் அக்டோபர் 30 வரையிலான கால கட்டத்தில், அதேபோல ஐந்து போட்டிகளில் அவர் அரை சதத்தைத் தாண்டி புதிய வரலாறு படைத்தார். இதில் 2 சதங்களும் அடக்கம்.

பார்ட்னர்ஷிப்பில் தவான், சர்மா வரலாறு
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரன் குவிப்பில் கலக்கி வரும் ஷிகர் தவானும், ரோஹித் சர்மாவும் 2013ல் அதிக ரன்களைக் குவித்த பார்ட்னர்களாக திகழ்ந்தனர். இருவரும் இணைந்து 24 போட்டிகளில் 55.26 என்ற சராசரியுடன், 1271 ரன்களைக் குவித்தனர்.


Click it and Unblock the Notifications











