ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் போட்டிக்காக நிரப்பப்பட்ட தண்ணீர் திடீரென பச்சை நிறமாக காட்சியளித்ததால் வீரர்களும், பார்வையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
ஒலிம்பிக் தொடரில் பல பிரிவுகளில் நீச்சல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், செவ்வாய்க்கிழமை, மரியா லென்க் அக்குவாடிக்ஸ் மையத்தில் நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் நீச்சல் இறுதி போட்டி நடைபெற்ற நீச்சல் குளம் சர்ச்சைகளின் நடு நாயகமாகியுள்ளது.
இதற்கு காரணம், நீச்சல் குளத்தின் தண்ணீரை பார்க்க, பராமரிப்பு இன்றி தேங்கி கிடக்கும் குளம், குட்டையின் தண்ணீர் போல பச்சையாக காட்சியளித்ததுதான்.
அதேநேரம், வாட்டர் போலோவுக்காக தயாராக இருந்த பக்கத்து நீச்சல் குளமோ பளிச்சென்ற நீல வண்ணத்தோடு காட்சியளித்தது. இந்த இரு படங்களையும் ஒப்பிட்டு சோஷியல் மீடியாவிலும் இத்தகவல் தீயாக பரவி வருகிறது.
குளோரின் குறைபாடு காரணமாக கெட்டுப்போன தண்ணீர் போல பச்சை நிறமாக நீர் காட்சியளித்ததாக கூறுகிறார்கள். ஒலிம்பிக் கமிட்டியிடமிருந்து இதுகுறித்து அதிகாரப் பூர்வ பதில் வரவில்லை.