Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“காமன்வெல்த் பதக்கம் வென்ற ஒருவன் உணவகத்தில் பாத்திரம் கழுவினான்”.. நெகிழ வைத்த ரிஷிகாந்த சிங்

டெல்லி: அன்று வெறும் 150 ரூபாய் தினக்கூலிக்கும், ஒருவேளை உணவிற்காகவும் உணவகத்தில் தட்டுகளை கழுவிய மணிப்பூர் சிறுவன், இன்று கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்திய நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார். பளுதூக்குதல் வீரர் ரிஷிகாந்த சிங்கின் இந்த கண்ணீர் கலந்த வெற்றிக் கதை பலரையும் நெகிழ வைத்துள்ளது.

2026 காமன்வெல்த் போட்டிகளில் ஆண்களுக்கான 60 கிலோ பளுதூக்குதல் பிரிவில் 264 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார் ரிஷிகாந்த சிங் சனாம்பம். மணிப்பூரின் இம்பால் நகருக்கு அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ரிஷிகாந்த சிங் 11 வயதாக இருந்த போது, குடும்ப வறுமை காரணமாக ஒரு சாலையோர உணவகத்தில் தட்டுகளைக் கழுவும் வேலை செய்தார். தந்தை டாக்சி ஓட்டுநராக இருந்தாலும், ஒருவேளை உணவிற்கே அவர்கள் திண்டாட வேண்டியிருந்தது. அவரது தாய் வெறும் மாவு உருண்டைகளை மட்டுமே சமைத்துக் கொடுக்க, காய்கறிகள் கூட இல்லாமல் அவர்கள் சாப்பிட்ட நாட்கள் ஏராளம்.

Rishikanta Singh From Daily Wage Dishwasher to Commonwealth Hero An Inspiring Sports Story

அவருக்கு 12 வயதாக இருந்த போது, ஒரு கிராமத்துத் திருவிழாவில் இவரது உடலமைப்பைக் கண்ட விளையாட்டு ஆசிரியர் ஒருவர், கும்மான் லம்பக் மைதானத்தில் உள்ள இந்திய அரசின் 'சாய்' (SAI) விளையாட்டு மைய சோதனைகளில் பங்கேற்கச் செய்தார். அங்கிருந்த பயிற்சியாளர் எஸ்.ப்ரோஜேந்திர சிங் இவரைப் பளுதூக்குதல் போட்டிக்குத் தேர்வு செய்தார்.

அங்கு கிடைத்த தொடர் பயிற்சியும், இலவச உணவும் அவரது பசியைப் போக்கியதுடன், சாதிக்கும் வெறியையும் தந்தது. கிழிந்துபோன பழைய காலணிகளையும், இடுப்பு பெல்ட்களையும் ஒட்டவைத்துத் தைத்து அவர் பயிற்சி மேற்கொண்டார்.

குடும்ப வறுமையால் 18வது வயதில் ஒரு வருடம் விளையாட்டை விட்டு விலகியிருந்தார். அப்போது மாநில பளுதூக்குதல் சங்கச் செயலாளர் சுனில் எலாங்பாம் அவரை தொடர்பு கொண்டு தக்யேலில் உள்ள சிறப்பு மையத்தில் சேர்த்தார். அதன் பிறகு 2019ல் தேசிய சாம்பியனான அவர், சமோவாவில் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். பின்னர் இந்திய கடற்படையில் அதிகாரியாக வேலை கிடைக்க, அவரது குடும்பத்தின் வறுமை ஒழிந்தது.

"பும்ராவுக்கு என்ன வயசாகுது? இன்னும் சின்னப்பையன் தான்".. ஜாம்பவான் மெக்ராத் சொன்ன முக்கிய அறிவுரை

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற மணிப்பூரின் முதல் ஆண் பளுதூக்குதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த ரிஷிகாந்த சிங் கூறுகையில், "இந்த பதக்கத்தை என் பெற்றோருக்கு அர்ப்பணிக்கிறேன். அன்று உணவகத்தில் என்னுடன் வேலை செய்த நண்பனுக்குப் போன் செய்து இதைக் கூறுவேன். அத்தோடு, காமன்வெல்த் பதக்கம் வென்ற ஒருவன் தனது உணவகத்தில் பாத்திரம் கழுவினான் என்று அந்த உணவக உரிமையாளர் தனது வாடிக்கையாளர்களிடம் பெருமையாகக் கூற வேண்டும் என விரும்புகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Story first published: Tuesday, July 28, 2026, 11:56 [IST]
Other articles published on Jul 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+