இலங்கையை கலக்கும் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ்.. நீரஜ் சோப்ரா தந்த அறிவுரை.. ஹர்திக்கை ரொம்ப பிடிக்கும்
கொழும்பு: இலங்கைக் கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்தவர் ருமேஷ் பத்திரங்கே திலகரத்ன தில்ஷன் மற்றும் பதும் நிஸ்ஸங்காவை உருவாக்கிய களுத்துறை மாவட்டத்தைப் பொறுத்தவரை, அத்தகைய கனவு அனைத்து இளைஞர்கள் மத்தியிலும் நிலவும் ஒன்று. 16 வயதில், ருமேஷ் நாட்டின் வேகமான இளம் பந்துவீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
தேசிய 18 வயதிற்குட்பட்டோர் திறமை வேட்டையின்போது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் 2026-ல் விளையாடும் இஷான் மாலிங்காவுக்குப் பின்னால், மணிக்கு 134 கி.மீ வேகத்தில் பந்துவீசி இரண்டாமிடம் பிடித்தார். கிரிக்கெட் தனது அடுத்த நட்சத்திரத்தைப் பெற்றதாகத் தோன்றியது. பின்னர், வாழ்க்கை வேறு ஒரு சவாலைத் தூக்கிப்போட, ருமேஷ் பத்திரங்கே ஈட்டி எறிதலைத் தேர்ந்தெடுத்தார்.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, 23 வயதான ருமேஷ் பத்திரங்கே புதிய விளையாட்டைக் கண்டுபிடித்ததுடன், தனது வாழ்க்கையின் நோக்கத்தையும் கண்டார். கடந்த ஆண்டில், ஆசியா மற்றும் ஓசியானியாவில் நடந்த பல சர்வதேசப் போட்டிகள், டோக்கியோவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் உட்பட ஆறு முறை 84 மீட்டருக்கு மேல் ஈட்டி எறிந்துள்ளார்.
இந்த ஆண்டு தியகமாவில் (இலங்கை) நடந்த சாம்பியன்ஸ் தடகளப் போட்டியில், அவர் 89.37 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலகத் தடகள சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இதுவே உலக அளவில் முன்னணி ஈட்டி எறிதல் நடப்பாண்டில் அதிக தூரமாகும். 90 மீட்டர் இலக்கு தற்போது வெறும் 63 சென்டிமீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளது.
இந்த தூரத்தின் முக்கியத்துவத்தை அறிய, பாரிஸ் 2024 ஒலிம்பிக்ஸ் போட்டியைப் பாருங்கள். அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து ஒரு புதிய ஒலிம்பிக் சாதனையை நிகழ்த்தி தங்கம் வென்றார். நீரஜ் சோப்ரா 89.45 மீட்டருடன் வெள்ளிப் பதக்கத்தையும், ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.54 மீட்டருடன் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர். ருமேஷ் பத்திரங்கே தியகமாவில் எறிந்த 89.37 மீட்டர் இந்த பதக்க எல்லைக்குள் அடங்கும்.
கடந்த செப்டம்பரில் டோக்கியோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில், கேஷோர்ன் வால்காட் 88.16 மீட்டருடன் தங்கம் வென்றார், பீட்டர்ஸ் வெள்ளி பெற்றார். இத்தூரங்களை ருமேஷ் பத்திரங்கே சமீபத்திய செயல்பாடு எளிதாக மிஞ்சியிருக்கும். அவர் அன்றைய இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா மற்றும் நதீம் இருவரையும் முந்தி ஏழாவது இடத்தைப் பிடித்தார்.
இலங்கை கடைசியாக ஒலிம்பிக் பதக்கம் வென்றது 2000ஆம் ஆண்டில், சிட்னியில் நடைபெற்ற மகளிர் 200 மீட்டரில் சுசாந்திகா ஜெயசிங்க வெள்ளி வென்றபோது நிகழ்ந்தது. அதன்பிறகு கால் நூற்றாண்டு காத்திருப்புத் தொடர்கிறது.
2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டி இன்னும் இரண்டு ஆண்டுகள் தொலைவில் உள்ளது. ஆயினும், பத்திரனின் 2026ஆம் ஆண்டு செயல்பாடுகள் இப்போதே புதிய விவாதத்தைத் தூண்டிவிட்டிருக்கிறது. இந்த ஜூலையில் கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நாகோயாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அவருடைய செயல்பாடு குறித்து எதிர்பார்ப்பை தூணடியுள்ளது.
கிளாஸ்கோ 2026 ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டிக்கு 82.61 மீட்டர் நுழைவுத் தரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தூரத்தைப் பத்திரன் பலமுறை எளிதாகத் தாண்டியும் உள்ளார். கிளாஸ்கோவில் நதீம், சோப்ரா, பீட்டர்ஸ், வால்காட் போன்ற சவாலான போட்டியாளர்கள் இருப்பார்கள், ஆனால் ருமேஷ் பத்திரங்கே அவர்களுக்குச் சற்றும் சளைத்தவர் அல்ல.
myKhel தளத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், ருமேஷ் பத்திரங்கேதனது சாதனையான எறிதல், அவர் கைவிட்ட கிரிக்கெட் மற்றும் அவரைத் தொடர்ந்து உந்தித்தள்ளும் கனவு குறித்துப் பேசினார்.தியகமாவில் 89.37 மீட்டர் எறிதல் குறித்துக் கேட்கப்பட்டபோது, ரமேஷ் பத்திரன்,”ஈட்டி என் கையிலிருந்து வெளியானதும் அது நல்ல எறிதல் என்று உணர்ந்தேன். 89 மீட்டர் தூரம் பலகையில் மின்னியதைப் பார்த்து அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அது எனக்கு ஒரு பெரும் சந்தோஷ தருணம்,” என்று தெரிவித்தார்.
கிரிக்கெட்டை மிஸ் செய்கிறீர்களா அல்லது ஈட்டி எறிதல் அதை முழுமையாகப் பிடித்துக்கொண்டதா என்ற கேள்விக்கு, “இல்லை. இலங்கை போன்ற ஒரு தெற்காசிய நாட்டில் தேசிய கிரிக்கெட் அணியில் இடம் பெறுவது கடினம். ஈட்டி எறிதல் இப்போது என் வாழ்க்கை. இது எனக்காக மட்டுமல்ல, என் நாட்டிற்காகவும் நான் எல்லாவற்றையும் செய்கிறேன். ஈட்டி எறிதலைத் தேர்ந்தெடுத்ததில் உண்மையாகப் பெருமைப்படுகிறேன்,” என ருமேஷ் பத்திரங்கே கூறினார்.
நீரஜ் சோப்ரா வழங்கிய மிக மதிப்புமிக்க அறிவுரை பற்றி,ருமேஷ் பத்திரங்கே, “உலக சாம்பியன்ஷிப்பின்போது காற்றிற்கு எதிராக எவ்வாறு எறிய வேண்டும் என்று அவர் எனக்கு அறிவுரை வழங்கினார். அன்று நான் எறிந்த சிலவற்றிற்கு அது மிகவும் உதவியாக இருந்தது,” என்றார்.
ஈட்டி எறியும் பாணியை லசித் மலிங்காவின் தனித்துவமான ஸ்லிங்ஷாட் பாணியுடன் ஒப்பிடும் வல்லுநர்கள் குறித்து, ருமேஷ் பத்திரங்கே, "லசித் மலிங்கா எங்கள் நாட்டில் ஒரு உண்மையான ஹீரோ. என் பாணி இயற்கையாகவே வருகிறது. நான் ஒரு வேகப்பந்து வீச்சாளராக இருந்தேன், பயிற்சியில் 150 முதல் 200 பந்துகள் வரை வீசுவேன். அந்தப் பின்னணி ஈட்டி எறிதலில் நான் வெற்றிபெற உதவியது," என்றார்.
"நான் இப்போதும் கிரிக்கெட்டை நேசிக்கிறேன். ஒரு போட்டிக்குப் பிறகு ஓய்வு நேரம் கிடைக்கும்போது என் அண்டை வீட்டாரோடு சாஃப்ட்பால் கிரிக்கெட் விளையாடுகிறேன். என் சொந்த ஊர் சாஃப்ட்பால் கிரிக்கெட்டுக்கு மிகவும் புகழ் பெற்றது," என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு புவனேஷ்வரில் நடந்த இந்திய ஓபன் பயணத்தின் விருப்பமான நினைவுகள் குறித்து, ருமேஷ் பத்திரங்கே, "அது ஈர்க்கக்கூடியது, இந்தியாவில் போட்டியிட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இலங்கைக்குப் பிறகு, இந்தியாவில் எனக்கு சிறந்த ரசிகர் பட்டாளம் இருப்பதாக நான் உணர்கிறேன்," என்று தெரிவித்தார்.
"நீங்கள் ஒரு சென்டிமீட்டர் முன்னேறும்போது, நாடும் ஒரு சென்டிமீட்டர் முன்னேறுகிறது" என்ற அவரது மேற்கோள் மற்றும் 90 மீட்டர் இலக்கு குறித்து கேட்ட போது, "நான் எந்த குறிப்பிட்ட தூரத்தையும் இலக்காகக் கொள்ளவில்லை. நான் ஒவ்வொரு நாளும் என் சிறந்ததைச் செய்ய முயற்சிக்கிறேன். உலகளாவிய பார்வையாளர்களுக்கு முன்னால் எங்கள் தேசிய கீதத்தை உரக்கப் பாட ஒரு வாய்ப்புக் கிடைத்தால் நான் உண்மையாக மகிழ்ச்சியடைவேன்," எனப் பதிலளித்தார்.
"என் பயிற்சியாளர் எப்போதும் சரியானவற்றைச் செய்ய, அடிப்படைகளை mastering செய்யவும், அவற்றைச் செம்மைப்படுத்துவதில் கவனம் செலுத்தவும் என்று கூறுவார். அப்போது முடிவுகள் ஒரு போனஸாக வரும். நான் தற்போது என் தவறுகளைச் சரிசெய்வதில் கவனம் செலுத்துகிறேன்," என்றார்.
"நீரஜ் மற்றும் அர்ஷத் இந்தத் துறையில் சிறந்தவர்கள், மேலும் நம் பகுதிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுடன் போட்டியிட வாய்ப்பு கிடைப்பது எனக்கு ஒரு பெரிய வெகுமதி, நான் எப்போதும் அவர்களைப் பார்த்து கற்றுக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டார்.
"அனைத்து இலங்கை கிரிக்கெட் வீரர்களும் என் விருப்பமானவர்கள், ஏனென்றால் அவர்கள் நம் நாட்டிற்குப் பெருமை சேர்க்கிறார்கள். ஐபிஎல்-ல் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கை நான் உண்மையிலேயே ரசிக்கிறேன். அவர் விளையாட்டை அணுகும் விதத்தைப் பாராட்டுகிறேன். இப்போது எனக்கு கிரிக்கெட் பார்க்க அதிக நேரம் கிடைப்பதில்லை, ஆனால் நான் முன்பு நிறைய பார்ப்பேன்," என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications