தேசிய விளையாட்டு போட்டிகள்: பளுதூக்குதலில் தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்!
திருவனந்தபுரம்: தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்குதலில் தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
35-வது தேசிய விளையாட்டுப் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில்தான் தமிழக அணிக்கு முதல் தங்கப்பதக்கம் கிடைத்தது.

டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணிகள் பிரிவில் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு- குஜராத் அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு 3-2 என்ற கணக்கில் வென்று தங்கப்பதக்கம் பெற்றது.
வெற்றி பெற்ற தமிழக அணியில் அந்தோணி அமல்ராஜ், சத்யன், பிரபாகரன், சுஷ்மித், சிவானந்தா இடம் பெற்று இருந்தனர். மேலும் பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், நீச்சல் ஆகியவற்றில் வெண்கல பதக்கம் கிடைத்தது.
இன்றைய போட்டியில் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் ஆண்களுக்கான 77 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் தங்கம் பதக்கம் வென்றுள்ளார். இதுவரை தேசிய விளையாட்டு போட்டியி்ல் தமிழ்நாட்டுக்கு 2 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன.
பதக்கப்பட்டியலில் 2 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்கள் என மொத்தம் 6 பதக்கங்களுடன் 8-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தை சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் ஏற்கனவே காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications