For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

20-20 கிரிக்கெட்: ஒரு 'இன்ஸ்டன்ட் ஹிட்'!

By Staff

டெல்லி:

சமீபத்தில் நடந்து முடிந்த 20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 3ல் 2 இந்தியர்கள் இந்தப் போட்டிகளைப் பார்வையிட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

முதன் முதலில் கிரிக்கெட் விளையாட்டில் டெஸ்ட் போட்டிகள் மட்டும் இருந்தன. பின்னர் நான்கு நாள் போட்டிகள் வந்தன. அதன் பின்னர் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஒரு நாள் போட்டிகள் அறிமுகமாகின.

ஒரு நாள் போட்டிகளில் ஆரம்பத்தில் தலா 60 ஓவர்களைக் கொண்டதாக போட்டிகள் இருந்தன. பிறகு இது 50-50 ஓவர் போட்டியாக இது மாற்றப்பட்டது. பல புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த 50 ஓவர் போட்டிகள்தான் உலகம் முழுவதும் பெரும் பாப்புலராக இருந்து வந்தன. இந்த நிலையில் புதிய மாற்றமாக 20-20 ஓவர் கிரிக்கெட் போட்டியை சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிமுகப்படுத்தியது.

ஒரு நாள் போட்டிகள் வந்தபோது அதை பலரும் எதிர்த்தது போல 20-20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கும் எதிர்ப்புகள் கிளம்பின. ஏன், உலகிலேய மிகப் பெரிய பணக்கார விளையாட்டு அமைப்பான இந்திய கிரிக்கெட் வாரியமும் 20-20 ஓவர் போட்டிகள் குறித்து அதிக அக்கறையும், ஆர்வமும் காட்டவில்லை.

இந்த நிலையில்தான், தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா கலந்து கொண்டது. எங்கே ஜெயிக்கப் போகிறார்கள் என்றுதான் அனைவரும் எண்ணியிருந்தனர். ஆனால் பெரிய பெரிய ஜாம்பவான் அணிகளையும் கூட இந்தியப் பொடியன்கள் பின்னி எடுத்ததைப் பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கி விட்டனர்.

20-20 உலகக் கோப்பைப் போட்டியை, உலகிலேயே இந்தியர்கள்தான் அதிகம் பார்த்து ரசித்துள்ளனர் என்று தற்போது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான சூப்பர் 8 போட்டி மற்றும் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான அரை இறுதி ஆகிய இரு போட்டிகளையும் மிக அதிக அளவிலான இந்தியர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

அதாவது மூன்றில் 2 இந்தியர்கள் இந்தப் போட்டிகளைப் பார்த்துள்ளனராம். இதில் முக்கியமான விசேஷம் என்னவென்றால், இந்தப் போட்டிகள் ஒளிபரப்பான நேரம், இந்தியாவில் உள்ள அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் 'மெகா, மகா' சீரியல்கள் ஒளிபரப்பாகும் நேரம். அதாவது இந்தியாவே 'கதறி அழும்' நேரம்.

அப்படிப்பட்ட கில்லர் சீரியல்களை எல்லாம் தியாகம் செய்து விட்டு கிரிக்கெட்டைப் பார்த்து ரசித்துள்ளனர் இந்தியர்கள். அதிலும் பெண்கள்தான் கிரிக்கெட்டை அதிகம் ரசித்துள்ளனர்.

இந்தியா-ஆஸ்திரேலியா அரையிறுதி போட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கை டிவி ரேட்டிங்கில் 23.2 புள்ளிகளை எட்டியுள்ளது.

இந்த போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்த இஎஸ்பிஎன்-ஸ்டார் கிரிக்கெட் சேனல் 63 சதவீதம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ரேட்டிங் எல்லாம் இந்தியா-பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு முன்பாக எடுக்கப்பட்டதாகும்.

இந்தியா விளையாடிய 5 போட்டிகளைத்தான் அதிகம் பேர் பார்த்துள்ளனர். பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடனான போட்டிகளில் டிவி ரேட்டிங் சராசரியாக 14 புள்ளிகளை தொட்டுள்ளது. இது சராசரியாக 5.4 புள்ளிகள் அதிகமாகும்.

இந்தியா விளையாடாத மற்ற போட்டிகளை பார்த்தவர்கள் எண்ணிக்கை மிக குறைவு. பாகிஸ்தான்-நியூசிலாந்து விளையாடிய அரையிறுதிப் போட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கை டிவிஆர் ரேட்டிங்கில் 4.5 புள்ளிகள் மட்டுமே.

பாகிஸ்தான்-இலங்கை போட்டி 4.5, நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்கா போட்டி 3.4, இலங்கை-வங்கதேசம் போட்டி 3.3 புள்ளிகளையும் ரேட்டிங்கில் பெற்றுள்ளன.

ஆனால் இந்தியா விளையாடிய 3 சூப்பர்-8 போட்டிகளையும் டிவியில் பார்த்தவர்களின் எண்ணிக்கை டிவி ரேட்டிங்கில் முறையே, 12.5, 14, 14.7 புள்ளிகள் என பதிவாகியுள்ளது.

இந்தியா விளையாடிய அரையிறுதிப் போட்டியை கண்டுகளித்தவர்களில் பெண்கள் தான் அதிகம் என்று தெரியவந்துள்ளது. அரையிறுதி போட்டியை பார்த்த பெண்களின் எண்ணிக்கை 12.8 புள்ளிகளாம்.

இந்த ஒட்டுமொத்த ரேட்டிங்கையும் கூட்டினால், அது இந்தி சானல்களில் ஒளிபரப்பாகும் 3 முன்னணி சீரியல்களைப் பார்ப்பவர்களை விட அதிகமாக வருகிறதாம்.

20-20 கிரிக்கெட் போட்டியை ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் கண்டுகளித்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.

20-20 கிரிக்கெட்டை பார்ப்பதற்கு காரணம், நேரம் குறைகிறது. அதே போன்று 50 ஓவர் போட்டிகளில் இருப்பது போல் இல்லாமல் விறுவிறுப்பாக செல்கிறது.

4 மணி நேரத்திற்குள்ளாக முடிவு தெரிந்து விடுகிறது. மற்ற போட்டிகள் என்றால் முடிவு தெரிவதற்காக ஒருநாள் முழுவதும் காத்திருக்க வேண்டும். ஜெயிப்பார்களா, கவிழ்ப்பார்களா என்று நகத்தைக் கடித்துத் துப்ப வேண்டியிருக்கும். ஆனால் 20-20 அப்படி இல்லை என்பது கிரிக்கெட் ரசிகர்களின் கருத்து.

விழுந்து விழுந்து கிரிக்கெட் பார்ப்பதில் தவறில்லை. அதே அளவுக்கு ஆர்வத்தையும், அக்கறையையும் மற்ற விளையாட்டுக்களுக்கும் தந்தால் போதும் என்பது மற்ற விளையாட்டுக்களை ரசிக்கும் ரசிகர்களின் கருத்து.
Story first published: Wednesday, December 7, 2011, 17:29 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+