டெல்லி : மாற்றுத்திறனாளி உயரம் தாண்டுதல் வீரரான சரத் குமார் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்து போராட பிரதமர் நிவாரண நிதியாக ரூ.1,00,001 கொடுத்துள்ளார்.
பல கிரிக்கெட் வீரர்கள் இன்னும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உதவி செய்யும் வகையில் நிதி வழங்கவில்லை என ரசிகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அவர்களுக்கு கடும் அழுத்தத்தை கொடுத்துள்ளார் சரத் குமார்.
2014 ஆசிய பாரா விளையாட்டு தொடரிலும், 2018 பாராலிம்பிக் தொடரிலும் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றவர் தான் இந்த சரத் குமார். மேலும், 2017 உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
இவர் தனது மொத்த சொத்து மதிப்பில் ஒரு சதவீதத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். இதன் மூலம், அவரது சொத்து மதிப்பு ஒரு கோடி இருக்கலாம் என தெரிகிறது.
ஒரு கோடி சொத்து மதிப்பு கொண்ட ஒருவர் ஒரு லட்சம் அளிக்கும் போது பல கோடி சொத்து மதிப்பு கொண்ட கிரிக்கெட் வீரர்கள் பல லட்சங்கள், கோடிகளை அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சச்சின், கங்குலி, அஜின்க்யா ரஹானே, கௌதம் கம்பீர், தோனி உள்ளிட்ட பலரும் கொரோனா பாதிப்பிற்கு உதவி செய்துள்ளனர். மற்ற கிரிக்கெட் வீரர்களும் இது போல உதவி செய்ய வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சில நாட்கள் தாமதத்துக்குப் பின் பிசிசிஐ அமைப்பு 51 கோடி பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.