ஒலிம்பிக்குக்குத் தகுதி பெற்றார் குத்துச் சண்டை வீரர் ஷிவ தாபா... வாய்ப்பை இழந்தார் மேரிகோம்!
பெய்ஜிங்: சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் ஷிவ தாபா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தகுதியை அவர் பெற்றுள்ளார்.
வரும் ஆகஸ்ட் மாதம் பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்களுக்கான 56 கிலோ உடல் எடைப்பிரிவு அரை இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. அப்போது இந்திய வீரர் ஷிவ தாபா, கஜகஸ்தானைச் சேர்ந்த கைராத் யெராலியெவ்வோடு மோதினார். போட்டியின் இறுதியில் 3-0 என்ற கணக்கில் கைராத்தை வீழ்த்தி ஷிவ தாபா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

ஷிவ தாபா...
இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஷிவ தாபா, தாய்லாந்து வீரர் சாட்சாய் புட்தேவை எதிர்கொள்கிறார். இதற்கிடையே இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததன் மூலம், ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார்.

பெருமை...
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷிவ தாபா (22). இவர் இரண்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அதோடு, இந்த ஆண்டு ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

நம்பிக்கை...
தனது இந்த வெற்றி குறித்து ஷிவ தாபா கூறுகையில், ‘மிகவும் முக்கியமான இந்த பந்தயத்துக்காக கடுமையாக உழைத்தேன். இதனால் எனது முழு ஆற்றலும் தீர்ந்து போனாலும் கூட, இப்போது தான் நிம்மதி அடைந்துள்ளேன். எனது இந்த வெற்றிகரமான பயணத்துக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கு நான் எவ்வளவு நன்றி தெரிவித்தாலும் போதாது. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்த முறை நல்லபடியாக நடக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.

தேவேந்திரசிங்...
இதேபோல், 49 கிலோ உடல் எடை பிரிவினருக்கான மற்றொரு அரை இறுதியில் காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் தேவேந்திரசிங் 0-3 என்ற கணக்கில் மங்கோலியா வீரர் ரோஜென் லாடோனிடம் தோற்றார்.

வெற்றி பெற்றால்...
வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்துள்ள தேவேந்திரசிங், ஒலிம்பிக் வாய்ப்புக்கான அடுத்த பந்தயத்தில் மங்கோலியா வீரர் கான் எர்டெனெவுடன் மோதுகிறார். இப்போட்டியில் வெற்றி பெற்றால் தேவேந்திரசிங் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேரிகோம்...
இதற்கிடையே 5 முறை உலக சாம்பியனும், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவருமான இந்திய நட்சத்திர வீராங்கனை மேரிகோம், பெண்களுக்கான 51 கிலோ உடல் எடைப்பிரிவின் அரை இறுதியில் 0-3 என்ற கணக்கில் சீன வீராங்கனை ரென் கேன்கேனிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு பறிபோனது.

மற்றொரு வாய்ப்பு...
ஆனால், வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்த மேரிகோம், கஜகஸ்தானில் மே மாதம் நடைபெறும் சவால் நிறைந்த உலக போட்டியில் வெற்றி பெற்றால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications