ஐதராபாத்: இந்திய டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சா, சோயிப் மாலிக்கை திருமணம் செய்வதற்கு 3 மாதத்திற்கு முன் தனது நிச்சயதார்த்தத்தை நிறுத்திய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் இருவரும் விவாகரத்து செய்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்த நிலையில், சோயிப் மாலிக் நேற்று பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை திருமணம் செய்ததன் மூலம் உறுதி செய்யப்பட்டது.

சானியா மிர்சாவின் விவாகரத்திற்கு, சோயிப் மாலிக்கின் திருமணத்தை மீறிய உறவே காரணமாக அமைந்துள்ளது. சானியா மிர்சாவுடன் வாழ்ந்து வந்த போது வேறு சில பெண்களுடன் சோயிப் மாலிக் தொடர்பில் இருந்ததாகவும், அந்த தவறை மீண்டும் மீண்டும் சோயிப் மாலிக் செய்ததாலேயே சானியா மிர்சா பிரியும் முடிவை எடுத்ததாக தெரிய வந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பே சானியா மிர்சா விவாகரத்து பெற்றுவிட்டதாகவும் சானியா மிர்சா சகோதரி தெரிவித்துள்ளார். சானியா மிர்சா - சோயிப் மாலிக் இருவருக்கும் 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. அதற்கு முன்பாக சோயிப் மாலிக், முதல் மனைவி ஆயிஷா சித்திக்கியை விவாகரத்து செய்திருந்தார்.
அதேபோல் 2009ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சானியா மிர்சாவுக்கு, ஐதராபாத்தை சேர்ந்த அவரின் நீண்ட கால நண்பரான முகமது சோரப் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் அந்த நிச்சயதார்த்தத்தை 6 மாதத்திற்கு பின் சானியா மிர்சா நிறுத்தினார். அப்போது சானியா மிர்சா தரப்பில், நாங்கள் நீண்ட ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தோம். நிச்சயதார்த்த காலத்தில் எங்களுக்குள் ஒத்துப்போகவில்லை என்று கூறினார்.
இரு தரப்பிலும் வேறு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்திய அடுத்த 3 மாதத்தில், சானியா மிர்சா கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார். இதனால் நிச்சயதார்த்தத்திற்கு பின் சானியா மிர்சா - மாலிக் இடையில் காதல் மலர்ந்ததாக பேசப்பட்டு வந்தது. அதன்பின் சானியா மிர்சாவின் சுயசரிதையில், சோயிப் மாலிக்கை ஆஸ்திரேலியாவில் சந்தித்ததாக கூறியிருந்தார். 5 மாதங்களாக டேட்டிங் செய்து வந்தபோது, இருவரும் துபாயில் தான் சந்தித்து வந்துள்ளனர். அதன்பின் உடனடியாக திருமண உறவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.