
சினேகஷிஷ் கங்குலி
கங்குலியின் சகோதரர் சினேகஷிஷ் கங்குலி பெங்கால் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருக்கிறார். அவரது குடும்பம் கொல்கத்தாவின் மொமின்பூர் எனும் இடத்தில் வசித்து வருகின்றனர். கங்குலி மற்றும் அவரது குடும்பம் அவர்களது பூர்வீக இல்லத்தில் வசித்து வருகின்றனர்.

மனைவிக்கு கொரோனா
கடந்த மாதம் சினேகஷிஷ் கங்குலியின் மனைவி மற்றும் அவரது பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அப்போது அவர்கள் வேறு இல்லத்தில் இருந்ததாலும், அவர்களோடு கங்குலி தொடர்பில் இல்லாததாலும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்தார்.

தொற்று இல்லை
அப்போது சினேகஷிஷ் கங்குலியின் பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இல்லை என தெரிய வந்தது. எனினும், அப்போது சில ஊடகங்கள் அவருக்கும் தொற்று இருப்பதாக கூறி செய்திகள் வெளியிட்டு இருந்தன. அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் சினேகஷிஷ் கங்குலி.

காய்ச்சல்
அவர் தனக்கு பாதிப்பு இல்லை என அப்போது விளக்கம் அளித்தார். ஆனால், தற்போது ஒரு மாதம் கழித்து அவருக்கு பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கடந்த இரண்டு, மூன்று நாட்களாக அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர் பரிசோதனை செய்து கொண்டார்.

பாதிப்பு உறுதி
அதன் முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தன் மனைவிக்கு பாதிப்பு ஏற்பட்டது முதல் கங்குலியின் இல்லத்தில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

கங்குலி தனிமை
அதனால், கங்குலி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட உள்ளனர். கங்குலி கடந்த ஜூலை 8 அன்று தன் பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அதில் அவரது சகோதரரும் கலந்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

இரண்டாம் கட்ட பரிசோதனை
சினேகஷிஷ் கங்குலிக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை நடத்தி கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் உறுதி செய்யப்பட உள்ளது. அதைத் தொடர்ந்தே கங்குலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்யப்படுமா? என்பது தெரிய வரும்.

ரசிகர்கள் அதிர்ச்சி
கங்குலி தனிமைப்படுத்தப்பட்டார் என்ற தகவலை அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சௌஹானுக்கு பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications