உலகக் கோப்பை கால்பந்து: சாம்பியனாக வாய்ப்புள்ள அணிகளான ஸ்பெயின்- நெதர்லாந்து இன்று மோதல்!!
சால்வடா: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் அணியும் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ளதாக கருதப்படும் நெதர்லாந்து அணியும் இன்று மோதுகின்றன.
2010ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினும் நெதர்லாந்தும் மோதின. அப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் பெற்றது.
அதன் பின்னர் தற்போதைய தொடரில் 2வது நாளில் இரண்டு அணிகளும் மீண்டும் மோதுகின்றன. இதனால் கடந்த தோல்விக்கு ஸ்பெயினை நெதர்லாந்து பழிதீர்க்கும் வகையில் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடும்.

இதுவரை..
இந்த இரு அணிகளுமே இதுவரை மொத்தம் 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஸ்பெயின் 5 போட்டிகளிலும், நெதர்லாந்து அணி 4 போட்டிகளிலும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் சமனில் முடிந்துள்ளது.

பைனல் மாதிரியே..
இரண்டு அணிகளுமே சம பலம் வாய்ந்தது என்பதால் கடந்த தொடரின் இறுதி ஆட்டம் போலவே இந்த முதல் ஆட்டமும் இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

வலுவான நிலையில் ஸ்பெயின்
ஸ்பெயினைப் பொறுத்தவரையில் பயிற்சி ஆட்டங்களில் தொடர் வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதே பலத்துடன் ஸ்பெயின் அணியை வழிநடத்த கேப்டனும், கோல் கீப்பருமான இகேர் கேசில்லாஸ், சேவி, ஷபி அலோன்சா, இனியஸ்டா, ஜோர்டி அல்பா ஆகியோர் முனைப்புடன் உள்ளனர்.

கோட்டை விடாத வீரர்கள்
ஸ்பெயின் அணியில் ஜொலிக்கும் நட்சத்திர வீரர்கள் செர்ஜி ரமோஸ், செர்ஜியோ பஸ்கியூட்ஸ், டேவிட் வில்லா, சில்வா என ஏராளமானோர் இருந்தாலும் இன்றைய போட்டி முக்கியமான முதல் போட்டி என்பதால் எந்த விதத்திலும் விட்டுக் கொடுத்துவிடாத வலுவான வீரர்களைத்தான் பயிற்சியாளர் டெல் போஸ்க்யூ களம் இறக்குவார்.

பழிதீர்க்கும் நெதர்லாந்து?
நெதர்லாந்தைப் பொறுத்தவரையில் அணி வரிசையில் 15வதாக இருந்தாலும் கடந்த இறுதிப் போட்டியில் நிச்சயம் பழிதீர்க்கும் வகையில் வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தும். கடந்த உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் ஏற்படுத்திய வடு இன்னும் எங்களை விட்டுப் போகவில்லை என்று வெளிப்படையாகவே நெதர்லாந்தின் ஸ்னிஜ்டர் கூறியுள்ளார்

100வது போட்டியில் ஸ்னிஜ்டர்
ஸ்னிஜ்டரைப் பொறுத்தவரையில் அவருக்கு இது 100வது போட்டி. அதனால் தமது முழுத்திறமையையும் அவர் வெளிப்படுத்துவார். இன்றைய ஸ்பெயின் - நெதர்லாந்து மோதல் மிகுந்த பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே இருக்கப் போவதில்லை.


Click it and Unblock the Notifications