2012: வியக்க வைத்த விளையாட்டு உலகம்- ஒரு பார்வை
டெல்லி: விளையாட்டு உலகம் பல பெருமைமிகு சாதனைகளை 2012-ல் நிகழ்த்தியிருக்கிறது. அதே நேரத்தில் சர்ச்சைகளிலும் உருண்டிருக்கிறது. அதுவும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் சஸ்பென்ட் செய்த போன்ற சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
இந்திய விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரையில் இந்த ஆண்டின் துயரம் என்பது, ஆண்டு முடிய சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று சச்சின் அறிவித்திருப்பதுதான்! அதுவும் சச்சின் தமது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தொடங்க இருந்த நிலையில் தமது ஓய்வை அறிவித்திருப்பது இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்!
இதேபோல் இந்திய வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்பதை தடுக்கும் வகையில் இந்திய ஒலிம்பிக் சங்கம், சஸ்பென்ட் செய்யப்பட்டதும் ஒரு அதிர்ச்சிதான். சர்வதேச அளவில் லண்டன் ஒலிம்பிக் போட்டிகள், உசைன் போல்ட்டின் சாதனை, கால்பந்தில் முல்லரின் கோல் சாதனையை முறியடித்த மெஸ்ஸி என பெருமிதத்துக்குரிய சாதனைகளும் இருக்கின்றன.

ஒலிம்பிக்கில் உசைன் போல்ட் சாதனை
லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் தடகளப் போட்டியில் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை புரிந்தார். கடந்த பெய்ஜிங்கில் தாம் நிகழ்த்திய சாதனையை லண்டனில் அவரே சமன் செய்தார். 200 மீட்டர் ஓட்டத்தில் 19.32 செகண்டுகளில் ஓடி 1996-ல் நிகழ்த்தப்பட்ட சாதனையையும் சமன் செய்தார் போல்ட்

அமெரிக்க நீச்சல் வீரர் பெல்ப்ஸ்-ன் 22 பதக்கங்கள்
ஒலிம்பிக் போட்டி வரலாற்றிலேயே அதிகபட்சமாக 22 பதக்கங்களை வென்ற பெருமை அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸுக்கு உண்டு! பெல்ப்ஸ் பங்கேற்ற 3-வது ஒலிம்பிக் போட்டி லண்டனில் நடைபெற்றது. ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 18 தங்கம் மற்றும் 2 சில்வர், 2 வெண்கலம் வென்ற ஒரே வீரரை லண்டன் போட்டி மூலம் பெற்றார் பெப்ஸ். ரஷியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லெட்டினா, அதிகபட்சமாக 9 தங்கம் உட்பட 18 பதக்கங்களை வென்றிருந்ததே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. கடந்த 1956 முதல் 1964ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 3 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு நிகழ்த்தப்பட்ட லெட்டினாவின் சாதனையை லண்டனில் பெல்ப்ஸ் முறியடித்தார்.

மீண்டும் ஸ்பெயின் வசமான யூரோ கோப்பை கால்பந்து
யூரோ கோப்பையை நடப்பு ஆண்டில் மீண்டும் வென்றதன் மூலம் ஸ்பெயின் புதியசாதனையை நிகழ்த்தியது. எந்த ஒரு அணியும் 2 முறை யூரோ கோப்பையை தொடர்ந்து வென்றது இல்லை. ஸ்பெயின் அணி வசம் யூரோ கோப்பை செல்வது 3-வது முறை! முன்னர் 1964 மற்றும் 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் யூரோ கோப்பையை வென்றது ஸ்பெயின். நடப்பாண்டில் கோப்பையைக் கைப்பற்றியதன் மூலம் ஸ்பெயின், ஜெர்மனியின் சாதனையை சமன் செய்தது. 1972, 1980, 1996-ம் ஆண்டுகளில் ஜெர்மனி சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது. தென்ஆப்பிரிக்காவில் 2010-ம் ஆண்டு நடந்த உலக கோப்பையை ஸ்பெயின் அணி கைப்பற்றி இருந்தது. இதன்மூலம் 3 மிகப்பெரிய போட்டிகளில் ( தொடர்ந்து சாம்பியன் பட்டம் பெற்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை ஸ்பெயின் படைத்தது.

கால்பந்தில் கலக்கிய மெஸ்ஸி
கால்பந்து போட்டியில் ஒரே ஆண்டில் 85 கோல்களை அடித்த பெருமை ஜெர்மன் வீரர் முல்லருக்குத்தான் இருந்து வந்தது. நடப்பாண்டில் இந்த சாதனையை முறியடித்தார் மெஸ்ஸி. பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி இன்றைய தேதி வரை 2012-ம் ஆண்டில் அடித்த கோல்களின் எண்ணிக்கை 90! இதுவே தற்போதைய உலக சாதனை!

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு தடை
சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் விதிகளை பின்பற்றி தேர்தலை நடத்தாதற்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்தை அந்த அமைப்பு சஸ்பென்ட் செய்தது. இதனால் இந்திய வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதே கேள்விக்குறியாகிப் போனது பெரும் அதிர்வலைகளை நாடு முழுவதும் ஏற்படுத்தியது.

கால்நூற்றாண்டு சகாப்தம் சச்சின்
இந்திய கிரிக்கெட்டின் கால் நூற்றாண்டு காலம் சச்சின் டெண்டுல்கர். இனி ஒரு நாள் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று திடீரென அறிவித்துவிட்டார். 1989 ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய இந்த சகாப்தம் டிசம்பர் 23-ந் தேதியன்று தமது ஓய்வு முடிவை அறிவித்தது. 436 ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களை எடுத்து உலக சாதனை படைத்திருக்கும் பெருமைக்குரிய சச்சின் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் இல்லை என்பது இந்திய ரசிகர்களுக்கு வருத்தமே!


Click it and Unblock the Notifications