லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நடைபெற உள்ள விளையாட்டு போட்டிகளை குறித்த செய்திகளை உடனுக்கு உடன் சேகரிக்க, உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 21 ஆயிரம் நிருபர்கள் லண்டன் நகரில் குவிய உள்ளனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த சுமார் 16 ஆயிரம் வீரர்கள், வீராங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒலிம்பிக் போட்டிகளை குறித்து செய்திகளை உடனுக்கு உடன் சேகரிக்க, 21 ஆயிரம் நிருபர்கள் லண்டனில் முகாமிட உள்ளனர். இதில் பலரும் இப்போதே லண்டன் நகரில் வந்து சேர்ந்துவிட்டனர்.

இங்கிலாந்தின் ஒளிப்பரப்பு அதிகாரத்தை பெற்றுள்ள பிசிசி நிறுவனம், ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா முதல் இறுதி விழா வரை சுமார் 2,500 மணிநேரம் நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப உள்ளது. இதில் லண்டன் ஒலிம்பிக்கின் அனைத்து போட்டிகள், நடைபெறும் இடங்கள், சாதனைகள் என்று அனைத்தையும் ஒளிப்பரப்ப உள்ளது. இதற்காக ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ள 17 நாட்களும் பிசிசி சேனல் 'பிசி'யாக செயல்பட உள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளின் வரலாற்றிலேயே முதல் முறையாக லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 3டி தொழிற்நுட்பத்துடன் 33 கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 230 மணி நேரம் காட்சிகள் பதிவு செய்யப்பட்டு, 3டி முறையில் நேரடியாக ஓளிப்பரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா மற்றும் நிறைவு விழா முழுவதும் 3டி தொழிற்நுட்பத்தில் ஒளிப்பரப்ப பிபிசி முடிவு செய்துள்ளது. மேலும் ஆண்களுக்கான 100 மீட்டர் நீச்சல் போட்டியும் 3டி மூலம் ஒளிப்பரப்ப உள்ளது.
இது குறித்து பிபிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
லண்டன் ஒலிம்பிக் போட்டியை முழுமையாக ஒளிப்பரப்பும் வகையில், பிபிசி நிறுவனம் மொத்தம் 24 சேனல்களை பயன்படுத்த உள்ளது. பிபிசி சேனல் நம்பர் அல்லது ரிட் பட்டன் மூலம் மேற்கண்ட சேனல்களில் ஒளிப்பரப்பாகும் போட்டிகளை கண்டு களிக்கலாம்.
மேலும் இணையதள வசதி கொண்டு டிவிக்கள், கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்கள் ஆகியவற்றிலும் பிபிசியின் 24 சேனல்களை கண்டு களிக்கலாம். இதன்மூலம் இணையதளத்தில் பிபிசி சேனல்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் புதிய சாதனை படைக்க முடியும் என்று நம்புகிறேன்.
ஐரோப்பிய நாடுகளில் யூரோஸ்போர்ட் நிறுவனம் லண்டன் ஒலிம்பிக் போட்டியின் காட்சிகளை 3டி முறையில் ஒளிப்பரப்ப உள்ளது. அமெரிக்காவில் ஒலிம்பிக் போட்டியின் ஒளிப்பரப்பு உரிமையை பெற்றுள்ள என்.பி.சி நிறுவனம் போட்டியை 3டி தொழிற்நுட்பத்துடன் 200 மணி நேரம் ஒளிப்பரப்ப முடிவு செய்துள்ளது.
ஒலிம்பிக் போட்டியின் 5,500 மணி நேர சம்பவங்களை படம் பிடித்து நேரடியாக ஒளிப்பரப்பும் வகையில், சுமார் 2,700 ஊழியர்களை கொண்ட குழுவை என்.பி.சி. நிறுவனம் லண்டனுக்கு அனுப்பி உள்ளது.
இது குறித்து என்.பி.சி. விளையாட்டு குழு தலைவர் மார்க் லாசரஸ் கூறுகையில், லண்டன் ஒலிம்பிக் போட்டியின் நேரடி ஒளிபரப்பு, தொலைக்காட்சி வரலாற்றிலேயே ஒரு பெரிய சாதனையாக அமையும் என்றார்.