For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் கோலாகல தொடக்கம்!

By Staff
Beijing Olympics Opening Ceremony
பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் 29வது ஒலிம்பிக் போட்டிகள், கோலாகல வான வேடிக்கை, கலை நிகழ்ச்சிகள், வீரர்கள், வீராங்கனைகளின் கண்கவர் அணிவகுப்புடன் பிரமாண்டமாக தொடங்கியது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகள், நேற்று சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கியது. இதற்காக கண்கவர் தொடக்க விழாவுக்கு சீனா ஏற்பாடு செய்திருந்தது.

சீன நேரப்படி இரவு 8.08 மணிக்கு தொடக்க விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. பறவைக் கூடு உருவில், பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய ஸ்டேடியத்தில் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடந்தன.

இரண்டு கட்டமாக தொடக்க விழா நடைபெற்றது. முதலில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இரண்டாவதாக வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடந்தது.

சீன பாரம்பரிய இசையுடன் தொடக்க விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. இதையடுத்து 15 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் தொடங்கின.

சீனாவின் பழம் பெருமை மற்றும் மாடர்ன் சீனாவை பிரதிபலிக்கும் வகையில் சீனக் கலைஞர்கள் நிகழ்த்திய நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.

பெய்ஜிங் ஒலிம்பிக்கின் தீம் பாடலை சீனாவின் லியூ ஹூவான் மற்றும் இங்கிலாந்தின் சாரா பிரைட்மேன் ஆகியோர் பாடினர்.

கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஒவ்வொரு நாட்டின் வீரர், வீராங்கனைகளும் அவரவர் நாட்டு பாரம்பரிய உடைகளுடன், தங்களது நாட்டு தேசியக் கொடிகளை ஏந்தியபடி மிடுக்கான நடை போட்டு அணிவகுத்து வந்தனர்.

மொத்தம் 250 நாடுகளின் வீரர், வீராங்கனைகள் அணிவகுத்து வந்தனர். சீன அகரவரிசைப்படி ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும் அணிவகுத்து வந்தனர்.

ஒலிம்பிக் போட்டி முதன்முதலில் நடந்த கிரீஸ் நாட்டு வீரர், வீராங்கனைகள் முதலில் அணிவகுத்து வந்தனர். தொடர்ந்து பல நாட்டு அணிகளும் அணிவகுத்து வந்தனர்.

கண்கவர் இந்தியா

56 பேருடன் சீனா சென்றுள்ள இந்திய அணி வீரர், வீராங்கனைகள், ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் தலைமையில் அணிவகுத்து வந்தது. ரத்தோர் நீண்ட ஷெர்வானி, அங்கவஸ்திரத்துடன் வீரர்கள் அணிவகுக்க, சேலை உள்ளிட்ட உடையில் இந்திய வீராங்கனைகள் எழில்மிகு தோற்றத்துடன் அணிவகுத்து வந்தனர்.

டென்னிஸ் வீராங்கனைகளான சானியா மிர்ஸாவும், சுனிதா ராவும் கருப்பு நிற டிரவுசர், பிராக்டிஸ் ஜாக்கெட்டுடன் கலக்கலாக வந்தனர். டெல்லி வீராங்கனை நேஹா அகர்வால் பச்சை நிற சேலையுடன் கண்ணைப் பறிக்கும் வகையில் பீடு நடை போட்டு வந்தார்.

இந்திய வீரர், வீராங்கனைகள் வந்தபோது பார்வையாளர் மாடத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், சோனியாவின் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா, இரு பேரக் குழந்தைகள், பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா ஆகியோர் எழுந்து நின்று வீரர்கள், வீராங்கனைகளைப் பார்த்து கையசைத்தனர். பதிலுக்கு இந்திய அணியினரும் உற்சாகமாக கையசைத்தனர்.

கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் நடந்த இந்த கண்கவர் தொடக்க விழாவின் இறுதியாக ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக 29வது ஒலிம்பிக் போட்டிகளை தொடங்கி வைப்பதாக சீன அதிபர் ஹூ ஜிந்தாவோ முறைப்படி அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது கண்ணைக் கவரும் வகையிலான வான வேடிக்கைகள் நடந்தன. பட்டாசுகள் மற்றும் வான வேடிக்கையால் பெய்ஜிங் நகரமே சொர்க்கபுரி போல மின்னியது.

பின்னர் ஒலிம்பிக் வளையங்கள் பொறிக்கப்பட்ட கொடியை ஏந்தியபடி சீன வீரர்கள் வலம் வந்தனர். அதன் பிறகு ஒலிம்பிக் கொடியும், சீன தேசிய கொடியும் ஏற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.

தொடக்க விழாவில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி, ஜப்பான் பிரதமர் யசுவோ புகுடோ, இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட 80 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு நேரில் பார்த்தனர்.

தொடக்க விழாவை 91 ஆயிரம் பேர் நேரடியாகவும், 100 கோடிக்கும் மேலானோர் தொலைக்காட்சிகள் மூலமும் கண்டுகளித்தனர்.

ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவையொட்டி மிக பலத்த பாதுகாப்புக்கு சீன அரசு ஏற்பாடு செய்திருந்தது. தேசிய ஸ்டேடியம் முழு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது. அதிரடிப்படை வீரர்கள் பெருமளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பெய்ஜிங் நகரம் முழுவதிலும் பாதுகாப்புக்கு போலீஸாரும், அதிரடிப்படையினரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரமாண்டமாக அமைந்த தொடக்க விழாவுடன் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கின.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+