நாடு திரும்பினார் 'தங்க மகன்' அபினவ் பிந்த்ரா-உற்சாக வரவேற்பு

10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் அபினவ் பிந்த்ரா. இதன் மூலம் 108 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்ற இந்திய வீரர் என்ற பெருமை பிந்த்ராவுக்குக் கிடைத்துள்ளது.
மேலும், 28 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குத் தங்கம் கிடைத்துள்ளது.பிந்த்ராவின் இந்த சாதனைக்கு நாடு முழுவதும் பாராட்டும், பரிசுகளும் குவிந்தவண்ணம் உள்ளன.
இந்தப் பின்னணியில் இன்று அதிகாலை டெல்லிக்கு திரும்பினார் பிந்த்ரா. விமான நிலையத்தில் அவருக்கு விளையாட்டுத்துறை அதிகாரிகள், இந்திய துப்பாக்கிச் சுடுதல் பெடரேஷன் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிந்த்ராவை அவரது தாயார் பப்லி பிந்த்ரா உச்சி முகர்ந்து வாழ்த்தி வரவேற்றார்.
ஜனாதிபதியுடன் சந்திப்பு:
இதையடுத்து அபினவ் தனது பெற்றோருடன் குடியரசு தலைவர் மாளிகைக்குச் சென்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை சந்தித்தார். அவரை பிரதிபா கன்னத்தில் தட்டிக் கொடுத்து பாராட்டினார்.
இதையடு்த்து பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று பிந்த்ரா சந்திக்கிறார்.
இதுகுறித்து அபினவ்வின் தந்தை பிந்த்ரா கூறுகையில், அபினவ்வின் இந்த சாதனை எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. நாட்டுக்கு பெருமையை சேர்ந்துள்ளான் என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆனந்தத்தை தருகிறது என்றார்.
மிட்டல் ரூ. 1.5 கோடி பரிசு:
அபினவ்வின் சாதனையை பாராட்டி அவருக்கு ரூ. 1.5 கோடி பரிசு வழங்குவதாக உலகின் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவரான லட்சுமி மிட்டல் அறிவித்துள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications